Published : 19 Feb 2024 04:51 AM
Last Updated : 19 Feb 2024 04:51 AM

சட்டப்பேரவையில் 2024-25 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

சென்னை: சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

மத்திய அரசின் பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்படுகிறது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, கடந்த 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது. அன்று நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 15-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் பதிலுரையும் அளித்தார்.

இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நாளை (பிப்.20) தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து, பட்ஜெட்கள் மீதான விவாதம் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும். விவாதத்துக்கு 2 அமைச்சர்களும் 22-ம் தேதி பதில் அளிக்கின்றனர். மேலும், வரும் நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, நிதி ஒதுக்கத்துக்கான சட்ட மசோதா தாக்கல் செய்து, நிறைவேற்றப்படுகிறது.

பட்ஜெட்டில் 7 சிறப்பு அம்சங்கள்: இந்நிலையில், ‘மாபெரும் 7 தமிழ்கனவு’ என்ற தலைப்பில் சமூக நீதி,கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிபயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும்ஆகிய 7 சிறப்பு அம்சங்கள் தமிழகபட்ஜெட்டில் இடம்பெறும் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

கடந்த முறை தமிழக பட்ஜெட்டை, அப்போது நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது, ‘வரும் ஆண்டில் சொந்த வரி வருவாய் ரூ.1.81 லட்சம் கோடியாக உயரும். வரியல்லாத வருவாய் ரூ.20,223.51 கோடியாக இருக்கும்’ என்று கணிப்பு தெரிவித்திருந்தார். மேலும், திருத்த மதிப்பீட்டில் மொத்தவருவாய் ரூ.2.45 லட்சம்கோடி என்றும் மதிப்பிட்டிருந்தார். அதேபோல, வருவாய் பற்றாக்குறை 2024-25-ல் ரூ.18,583 கோடியாக குறையும் என்றும், 2025-26-ம் ஆண்டில் ரூ.1,218.08 கோடி உபரி வருவாய் கிடைக்கும் என்றஎதிர்பார்ப்பையும் தெரிவித்திருந்தார். இதுதவிர, நிதி பற்றாக்குறை ரூ.92,075 கோடி என்றும், மொத்த கடன் 2024 மார்ச் வரை ரூ.7.26 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், மெட்ரோ ரயில் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காதது, தமிழகம் கடந்த ஆண்டு இறுதியில் சந்தித்த பேரிடர்கள், ஜிஎஸ்டி இழப்பீடு கிடைக்காதது, பல்வேறு திட்டங்களில் கூடுதல் பயனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி போன்றவை காரணமாக 2024-25-ம்ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் நிதிதொடர்பான எதிர்பார்ப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு: அதேநேரம், மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், மக்களுக்கான சலுகை திட்டங்கள், புதிய அறிவிப்புகள் ஆகியவை இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்னதாக கலைஞர் மகளிர் உரிமை தொகைகுறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின்வெளியிட்டார். தொடர்ந்து, பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது பயனாளிகள் எண்ணிக்கை 1.15 கோடியை தாண்டியுள்ளதால், இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டிய அவசியம் உள்ளது.

இதுதவிர, புதுமைப்பெண் திட்டத்தில் சிறுபான்மையின பெண்களும் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த திட்டத்துக்கும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

இதுதவிர, புயல், கனமழை, வெள்ளம் உள்ளிட்டபேரிடர்களால் பாதிக்கப்பட்ட சாலை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் அதிக நிதி தேவைப்படுகிறது. இதுபோன்று பல்வேறு துறைகளுக்கும் தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்யும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இலச்சினை வெளியீடு: பட்ஜெட்டின் நோக்கம் குறித்த கருத்தியலுடன் முதல்முறையாக புதிய இலச்சினையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ‘தடைகளை தாண்டி, வளர்ச்சியை நோக்கி’ என்ற தலைப்பில் பட்ஜெட் அளிக்கப்படுவதை குறிக்கும் விதமாக, இந்த இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x