Last Updated : 16 Feb, 2018 07:23 AM

 

Published : 16 Feb 2018 07:23 AM
Last Updated : 16 Feb 2018 07:23 AM

அடிப்படை உரிமைகளை தர அரசு மறுக்கிறது: கருணைக் கொலை செய்யக் கோரிய திருநங்கை உருக்கம்

எங்களுக்கான அடிப்படை உரிமைகளைத் தர அரசு மறுக்கிறது என்று, கருணைக் கொலை செய்யக் கோரிய திருநங்கை வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஷானவி பொன்னுசாமி, தனது குடும்பத்தின் முதல் பொறியியல் பட்டதாரி ஆவார். திருச்செந்தூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த அவர், குடும்பத்தை விட்டுப் பிரிந்து, மும்பை சென்றார். மாடலிங், நடிப்பு என பல திறமைகளைக் கொண்ட ஷானவி தனியாக நின்று சாதித்தும் காட்டினார். இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தபோது, திருநங்கை என்பதால் அவருக்கு பணி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஷானவி 2017 நவம்பரில் வழக்கு தொடர்ந்தார். பாலின பேதத்தால் ஏர் இந்தியா, தனக்கு பணி வழங்க மறுப்பதாக அதில் கூறியிருந்தார். இதுதொடர்பாக, ஏர் இந்தியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 4 மாதங்கள் கடந்த பிறகும் இரு தரப்பும் பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஷானவி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “பாலின பேதத்தால் ஏர் இந்தியா நிறுவனம் எனக்கு பணி அளிக்க மறுக்கிறது. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த என்னால், ஏர் இந்தியாவையோ, விமான போக்குவரத்து அமைச்சகத்தையோ பேசவைக்க முடியவில்லை. அதனால், அரசின் கைகளாலேயே உயிர் துறப்பதை பெருமிதமாகக் கருதுகிறேன். என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள். அன்றாட உணவு செலவுக்கே பணம் இல் லாத நான், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு எப்படி கட்டணம் தர முடியும்? என்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடுங்கள்” என உருக்கமாக எழுதியிருந்தார்.

இதுதொடர்பாக மும்பையில் இருக்கும் ஷானவியை தொடர்பு கொண்டபோது அவர் கூறிய தாவது: எனக்காக மட்டுமல்லாது என் ஒட்டுமொத்த சமூகத்துக்காகவும் போராடுகிறேன். காவல் உதவி ஆய்வாளர் பிரித்திகா யாசினி உட்பட பலரும் பல போராட்டத்துக்கு பிறகே உரிமையை பெற முடிந்தது. இது போல ஒவ்வொரு முறையும் அரசு மற்றும் நீதிமன்றத்தின் கதவை தட்ட இயலாது. அதற்கான பண பலமும் எங்களிடம் இல்லை.

கல்வி, வேலைவாய்ப்பு உட் பட அனைத்து அரசு துறைகளி லும் ஆண், பெண்ணுக்கு அடுத்ததாக 3-வது பாலினத்தை சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2014-ல் உத்தரவிட்டது. அதை இன்று வரை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. நாங்கள் வாழ்வாதாரமே இல்லாமல் கஷ்டப்பட அரசு மட்டுமே காரணம். தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் திருநங்கைகளுக்கு சரியான வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களையும் சமூகத்தில் ஒருவ ராக மதிப்பு கொடுத்து வைத்துள்ளனர்.

நாங்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை கொடுப்பதற்குகூட அரசு மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்துக்கே செவிசாய்க்காத மத்திய அரசு, எங்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை எப்படி காதுகொடுத்து கேட்கும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x