Published : 16 Feb 2024 04:16 PM
Last Updated : 16 Feb 2024 04:16 PM

“அமைச்சர் எ.வ.வேலு பதவி விலகத் தயாரா?” - மேல்மா சிப்காட் எதிர்ப்புக் குழுவினர் சவால்

சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் திட்டத்துக்கு நிலம் கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நிலத்தில் இறங்கி விவசாயிகள் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “எங்களுக்கு விவசாய நிலம் உள்ளது. இதனை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து எ.வ.வேலு விலக தயாரா?" என்று அவர்கள் சவால் விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 3-வது கட்ட சிப்காட் விரிவாக்க திட்டத்துக்காக, மேல்மா உட்பட 9 ஊராட்சிகளில் உள்ள 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி செய்கிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச் சாலையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள், "முப்போகம் விளையக் கூடிய விவசாய நிலங்களை பறித்தால் வாழ்வாதாரம் பாதிக்கும்" என முழக்கமிட்டனர்.

நூறு நாட்களை கடந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், 7 விவசாயிகளை முந்தைய ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் குண்டர் சட்டத்தில் இருந்து 7 விவசாயிகளும் விடுவிக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்களுடன் இணைந்து 2-ம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். ஒரு பிடி மண்ணை கூட அரசுக்கு கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

பதவி விலகத் தயாரா? - அமைச்சர் எ.வ.வேலு கருத்துக்கு மேல்மா சிப்காட் விரிவாக்க எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் குறும்பூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அமைச்சர், எ.வ.வேலுவை கண்டித்து முழக்கமிட்டனர். விவசாயிகள் கூறும்போது, "நிலம் கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தும், குண்டர் சட்டத்தில் கைது செய்தும் கொடுமைப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறி வருகிறார். எங்களுக்கு விவசாய நிலம் உள்ளது. இதனை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து எ.வ.வேலு விலக தயாரா?" என கேள்வி எழுப்பி உள்ளனர்.

சட்டப்பேரவையில் நடந்த விவாதம் என்ன? - தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்து வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நியாயமாக போராட்டம் நடத்திய 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை இந்த அரசு போட்டு அவர்களை கைது செய்தது கண்டிக் கத்தக்கது. விவசாயிகள் தங்களுடைய நிலங்களை காக்க, அறவழியில் போராட்டம் நடத்தினர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “நீங்கள் முதல்வராக இருந்த போது சிப்காட்டுக்கு நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என அறிவிப்பு எல்லாம் வந்தது. அதன் பின்னர், விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அரசு பொறுப் பேற்ற உடனே, நீங்கள் செய்த பணியை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதாலும், இளைஞர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தான் நிலத்தை கையகப்படுத்த இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது. மொத்தம் 9 ஊர்கள் உள்ளன. அதில், 7 ஊர்களின் விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து நிலத்தை கொடுக்கும் நிலை இருந்தது. 2 ஊர்களில் மட்டும்தான் சிலரின் தூண்டுதலின் அடிப்படையில் செயல்படுகின்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையினர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்து தூண்டிவிட்டனர். அந்தப் பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள், சிப் காட்டுக்கு நிலம் எடுங்கள், வேலை கொடுங்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலம் எடுக்கக் கூடாது என கூறுபவர்கள் மிகவும் குறைவு. நிலம் எடுத்து பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் என கூறுபவர்கள் 99 சதவீதத்தினர். நிலங்களை கையகப்படுத்தி அரசு எடுத்துக் கொள்ளாது. லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க தான் முயற்சி செய்கிறோம். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் இல்லை” என்றார் அமைச்சர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x