சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு, சென்னை வந்த 12 வயது சிறுவனை 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட காவல் ஆய்வாளர், தேடுதல் பணிக்கு உதவிய சென்னை ஆட்டோ டிரைவர் ஆகியோரை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், பெற்றோருடன் கோபித்துக்கொண்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறினான். மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற பயத்தில் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தனிப்படை போலீஸார் சிறுவனை தேடினர். இதற்கிடையே, வீட்டில் இருந்து ரூ.1,000 எடுத்துச் சென்ற சிறுவன், பஸ் மூலம் சென்னைக்கு வந்திருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை அடிப்படையாக வைத்தும் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், உறவினர்களைத் தேடி சென்னை வந்த சிறுவன், சரியான முகவரி தெரியாமல் புளியந்தோப்பு பகுதியில் தவித்தான்.
இதை கவனித்த புளியந்தோப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், சிறுவனிடம் சென்று விசாரித்தார். அப்போது, சிறுவன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். பின்னர், வீட்டை விட்டு வெளியேறியதை தெரிவித்தார். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர், சிறுவனிடம் அவரது பெற்றோரின் செல்போன் எண்ணை வாங்கி பேச வைத்தார். பின்னர் சிறுவனை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது ஒருபுறம் இருக்க, சிறுவனை தனிப்படையில் இடம் பெற்ற ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து தொடர்ந்து துப்பு துலக்கி வந்தனர். இறுதியில் 24 மணி நேரத்தில் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறுவன் வழிதவறி தவித்த நேரத்தில் மனிதாபிமானத்துடன் உதவிய ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் சிறப்பாக விசாரணை நடத்திய ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் தென்னரசு ஆகியோரை டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்துப் பாராட்டினார்.