ஷார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை 19 ரன்களில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
ஒரு கட்டத்தில் ஆப்கன் அணி ரஹ்மத்துல்லா குர்பாஸ் (0), முகமது அக்ரம் (0), கேப்டன் இப்ரஹிம் ஜத்ரான் (1), ஷாஹிதுல்லா (0), ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை அந்த அணி 5 ரன்கள் எடுப்பதற்குள் இழந்து ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையில் அவமானகரமாக ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அஸ்மத்துல்லா உமர்சாய் தன் வாழ்நாளின் ஆகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 5 பவுண்டரிகள் 12 சிக்ஸர்களுடன் 116 ரன்களை வெளுத்துக் கட்ட, இஜாஜ் அகமது அகமத்சாய் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களையும் பிற்பாடு ரஷீத் கான் இறங்கி 4 சிக்ஸர்களுடன் 6 பந்துகளில் 25 ரன்களை விளாசியதாலும் ஆப்கான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் என்று எதிர்பாரா ரன் எண்ணிக்கையை எட்டியது.
200 விக்கெட்டுகள் மைல்கல் - ரஷீத் கான் சாதனை
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசாவின் 56 பந்துகள் 106 ரன்கள் என்ற அதியற்புத இன்னிங்ஸினாலும் வெற்றி பெற முடியாமல் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் என்று முடிந்தது.
இதில் டி20 வரலாற்றில், டெஸ்ட் விளையாடும் நாடுகள் அல்லது இணை உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த வீரர்களில், 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக ரஷீத் உருவெடுத்துள்ளார். கிரிக்கெட்டின் இந்த மிகக் குறுகிய வடிவிலான போட்டிகளில், வேறு எந்த வீரரும் 171 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியதில்லை. இந்த வரிசையில், ஆடவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முதலில் 5 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் செதிக்குல்லா அடல் இறங்கி 21 பந்துகளில் 17 ரன்களை எடுத்து மசகேசா பந்தில் இவரும் ஆட்டமிழக்க ஆப்கன் அணி 8.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் என்று படுதோல்விக்கான அறிகுறியாக சரிவு கண்டது.
ஆனால், அதன் பிறகு நடந்தது சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சற்றும் எதிர்பாராத பிரமிப்பூட்டும் மீட்டெழுச்சி ஆகும். அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் இஜாஸ் அகமது அகமத்சாய் ஆகியோர் இணைந்து 142 ரன்கள் சேர்த்தனர். டி20 சர்வதேச போட்டிகளில் 6-வது விக்கெட்டுக்கு அல்லது அதற்கு கீழ் அமைந்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
முதல் 10 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 45 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அடுத்த 10 ஓவர்களில் 176 ரன்களை குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. உமர்சாய் 12 சிக்ஸர்களுடன் வெறும் 44 பந்துகளில் தனது முதல் டி20 சர்வதேச சதத்தை பதிவு செய்தார். இஜாஸ் அகமத்சாய் 27 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். தொடரின் முதல் போட்டியிலும் அவர் அரைசதம் அடித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானின் தொடக்க வரிசையை சிதைத்த ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களே பின்னர் கடுமையாக அடி வாங்கினர். பிராட் எவன்ஸ் தனது கடைசி ஓவரில் 27 ரன்களை வாரி வழங்க, குண்டாய் மடிகிமுவின் கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 44 ரன்கள் குவிக்கப்பட்டன.
40 வயதில் டி20 சதமெடுத்து சிகந்தர் ராசா சாதனை!
ரஷீத் கான் 6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 200 ரன்களை கடந்தது. பின்னர் பந்துவீச்சில் 200 டி20 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ரஷீத் கான் படைத்தார். மேலும், முதல் 4 விக்கெட்டுகளை 20 ரன்களுக்குள் இழந்த பின்னரும் 200 ரன்களை கடந்த முதல் ஆடவர் டி20 சர்வதேச அணியாக ஆப்கானிஸ்தான் புதிய சாதனை படைத்தது.
ஆப்கானிஸ்தானின் இமாலய இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கும் சிகந்தர் ராசா அபாரமாக பதிலடி கொடுத்தார். 40 வயதில் டி20 சர்வதேச போட்டியில் சதம் விளாசியதன் மூலம், இந்த வடிவில் சதம் அடித்த வயதான வீரர் என்ற சாதனையை ராசா படைத்தார்.
56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்த ராசா, இன்னிங்ஸின் கடைசி பந்தை மைதானத்தின் மேற்கூரைக்கு மேலாக சிக்ஸராக விளாசினார். அறிமுக வீரர் டஃபஸ்வா சிகாவுடன் இணைந்து ஆட்டமிழக்காமல் 120 ரன்கள் சேர்த்தார். இந்த கூட்டணி ஜிம்பாப்வேயை 200 ரன்களைக் கடக்கச் செய்தாலும், ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் அணியால் ராசாவின் அதிரடியை சமாளித்து வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.