Last Updated : 15 Feb, 2024 02:41 PM

 

Published : 15 Feb 2024 02:41 PM
Last Updated : 15 Feb 2024 02:41 PM

புதுச்சேரி இடைக்கால பட்ஜெட் பிப்.22-ல் தாக்கல்

கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 22-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் முதல்வர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்டது. ஒரு நாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் வருவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வரும் 22-ம் தேதி காலை 9.45 மணிக்கு புதுவை சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 2024 - 25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த 4 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறியது: “புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 22-ம் தேதி காலை 9.45 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினத்தில் 2024-25ம் நிதியாண்டுக்கான முன்னளி மானிய திட்ட முன்வரைவு (vote on Account) பேரவையில் முதல்வர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும். கூடுதல் நிதிக்கான செலவை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கின்றனர். புதுச்சேரியிலும் இடைக்கால பட்ஜெட்தான். 2023-24ம் நிதியாண்டுக்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. எத்தனை நாட்கள் பேரவை நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x