Published : 15 Feb 2024 02:11 PM
Last Updated : 15 Feb 2024 02:11 PM

“ஆளுநரின் சிறுபிள்ளைத்தன செயலுக்கு பயந்துவிட மாட்டோம்” - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருதும் வகையில் நடந்து கொண்டார். இது எங்களை அல்ல, நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் அல்லவா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பெரியார், அண்ணா, கருணாநிதிதான் எங்களை எந்நாளும் வழி நடத்திக் கொண்டிருக்கும் இயங்கு சக்திகள். இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று பெருமையை அடைய பெரியார், அண்ணா, கருணாநிதி வகுத்துக் கொடுத்த வழித்தடமே காரணம். திராவிட மாடல் கொள்கைகளில் பயணிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது. ஒரு காலத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று நாமே முழங்கினோம். இன்று தெற்கு வளர்கிறது, வடக்குக்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.

திராவிட மாடல் ஆட்சி: திராவிட இயக்கத்தினால்தான் இவை அனைத்தும் சாத்தியமாகி இருக்கிறது. ஆட்சி என்பது வெறும் அதிகாரம் அல்ல. கொள்கையை செயல்படுத்தும் களம் என்று மாற்றிக் காட்டியவர்கள்தான் அண்ணாவும் கருணாநிதியும். ‘இன்னாருக்கு மட்டுமே இன்னது’ என்பதை மாற்றி 'எல்லாருக்கும் எல்லாம்’ என்ற கருத்தியலை அரசியல் களத்தில் விதைத்தார் பெரியார். அதில் ஆட்சி நிர்வாகத்தில் செயல்படுத்தியவர்கள் அண்ணாவும் கருணாநிதியும். அதே கோட்பாட்டை இன்றைய நவீன கால சிந்தனையுடன் இணைத்து திராவிட மாடல் ஆட்சியை உங்களின் பேராதரவுடன் ‘நான்’ நடத்தி வருகிறேன்.

‘நான்’ என்றால் தனிப்பட்ட நான் அல்ல. அப்படி எப்போதும் நான் கருதியது கிடையாது. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று பொறுப்பேற்கும்போது அந்தச் சொல்லை உச்சரித்தது நான்தான். உச்சரிக்க வைத்தவர்கள் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள். அந்த தமிழ்நாட்டு மக்களுக்காகவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் சிந்தித்து செயல்பட்டு வருகிறேன். பெரியார், அண்ணாவின் வாரிசு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டு வருகிறேன். கோடிக்கணக்கான மக்களின் வளர்ச்சிக்காக என் மனசாட்சியின்படி நான் செயல்பட்டு வருகிறேன்.

ஆளுநருக்கு கண்டனம்: ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டுக்கான பேரவை நடவடிக்கைகள் தொடங்கி இருக்க வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துக் கொடுப்பதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரே என்று கருதும் வகையில் நடந்து கொண்டார். இது எங்களை அல்ல, நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் அல்லவா? கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் செயல் அல்லவா?

ஆளுநர் மக்களாட்சி மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அரசியல் சட்டத்தை மீறி தான் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு மாறாக செயல்படுவது அல்லவா? எங்களைப் பொறுத்தவரை இதைப்போன்று எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள். ‘தடைக் கற்கள் உண்டு என்றால், அதை உடைக்கும் தோள்களும் உண்டு’. ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறி உள்ளார். பாசிசத்தை எதேச்சதிகாரத்தை எதிர்த்து நிற்கும் நாம் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமான செயலைக் கண்டு பயந்துவிட மாட்டோம்.

திமுக அரசின் சாதனைகள்: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தால் கர்ப்பக் கிரகத்தில் சமத்துவம் நுழைய தொடங்கி விட்டது. எல்லாருக்கும் எல்லாம் என்று நோக்கத்தில் திராவிட மாடல் அரசு இயங்கி வருகிறது. என்னுடைய கையில் முதல்வர் என்ற பொறுப்பு வந்து 33 மாதங்கள் ஆகின்றன. இவை முன்னேற்ற மாதங்கள், சாதனை மாதங்கள். இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ஒன்பது விழுக்காடு பங்கை தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம். இது திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை.

ஒட்டுமொத்த இந்தியா வளர்ச்சி 7.24% ஆக இருக்கும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19% ஆக உள்ளது. இந்தியாவின் பணவீக்கம் 6.65 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.9% குறைந்திருக்கிறது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நமது வளர்ச்சியை பார்த்து இன எதிரிகளுக்கு கோபம் வருவதே சாதனை. அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ந்து வருவதை பார்த்து நம் எதிரிகளுக்கு பொறாமையும், கோபமும் வருகிறது அல்லவா?

நம் இன எதிரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கோபத்தை காட்டுகிறார்கள். கோபத்தை வெளிப்படுத்துவதில் அரசியலமைப்புச் சட்ட பதவியில் இருக்கும் ஆளுநரும் விதிவிலக்கு அல்ல. அரசியலமைப்புச் சட்ட பதவியில் இருக்கிறார் என்பதற்காக அதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

நான் முதல்வன் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 1.15 கோடி பெண்கள் பெற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்த ஆட்சி நடைபெற்று வருவதற்கான அடையாளங்களாக திமுக அரசின் பல்வேறு சாதனைகள் உள்ளன. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து கொடுத்து வருகிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற தடத்தில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

மக்களுக்கு உரிமை தொகை, விடியல் பேருந்து திட்டத்தின் மூலமாக பெண்களின் பொருளாதார சமூக நிலை உயர்கிறது. தன்னம்பிக்கையின் தற்சார்பு நிலையை அவர்கள் அடைகிறார்கள். பெண்களின் சமூக பங்களிப்பு 40 விழுக்காட்டில் இருந்து 65 விழுக்காடாக உயர்ந்து விட்டது. பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்ல, சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து கொடுத்து வருகிறோம். சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகியவைகளின் அனைத்து துறை வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கி ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் கொள்கையை உருவாக்கி அதன் தடத்தில் திமுக ஆட்சியானது நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுக்கு கண்டனம்: அதனால்தான் இந்தியாவின் முன்னனி பத்திரிகை மட்டுமல்லாமல், உலகளாவிய பத்திரிகைகளும் பாராட்டி வருகின்றன. இவை அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் சாதிக்கப்பட்டவை. மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் மத்திய அரசின் தவறான கொள்கைகளை நான் அதிகம் விவரிக்க தேவையில்லை, விரும்பமும் இல்லை.

நாம் இரண்டு இயற்கைப் பேரிடர்களை சந்தித்தோம். அதற்குக்கூட மத்திய அரசு நிவாரணத் தொகை தரவில்லை. 30.6.2022 முதல் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை நிறுத்திவிட்டார்கள், இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்பு திட்டங்களை தருவதில்லை,

தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது பேசாத எதிர்க்கட்சித் தலைவர் இப்போது குரல் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில உரிமைகளில் எதிர்க்கட்சித் தலைவர் எங்களோடு இணைந்து குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற எதிர்க்கட்சித் தலைவர் குரல் கொடுக்க வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x