Published : 01 Feb 2018 09:59 AM
Last Updated : 01 Feb 2018 09:59 AM

எஸ்.ஆர்.எம். சார்பில் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.16 லட்சம் நிதி: தமிழ்ப்பேராய விருது வழங்கும் விழாவில் பாரிவேந்தர் வழங்கினார்

எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம், மாணவர்கள் சார்பில் ஹார்வர்டு பல்கலைக் கழகத் தமிழ் இருக்கைக்கு ரூ.16 லட்சத்தை நிதியாக வழங்கப்பட்டது. மேலும் 14 பேருக்கு ரூ.22 லட்சம் காசோலை மற்றும் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கப்பட்டன.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழில் சிறுகதைகள், அறிவியல், நாடகம், மொழிபெயர்ப்பு நூல் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து அவற்றின் படைப்பாளிகள் 12 பேருக்கு தமிழ்ப்பேராய விருதும், பணமுடிப்பும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்ப்பேராய புரவலரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தருமான பாரிவேந்தர் தலைமை தாங்கினார். தமிழ்ப்பேராயத்தின் தலைவர் தி.பொ. கணேசன் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து, 12 படைப்பாளிகளுக்கு ரூ. 22 லட்சம் காசோலை மற்றும் 2017-ம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகளை சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதியரசர் கே.என். பாஷா, மற்றும் தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர்.

தமிழின் சிறப்பு

அப்போது அமைச்சர் க. பாண்டியராஜன் பேசியதாவது: உலகத்தில் 144 நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ரூ. 1,000 முதல் ஒரு கோடி வரை ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கு நிதி உதவி செய்துள்ளனர். தமிழக அரசு சார்பில் ரூ. 10 கோடி வழங்கப்பட்டுள்ளது. உலகில் 7 மொழிகள் செம்மொழியாக ஆங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி மட்டுமே அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது. மற்ற மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு உள்ளது. 2,000 ஆண்டுகள் கடந்து இன்றும் பேசப்படும் மொழியாக தமிழ் மொழி உள்ளது.

உலகில் 6,000-க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இதில் 3,000 மொழிகள் அழியும் தருவாயில் உள்ளது. மீதியுள்ள 3,000 மொழிகளில் 7 மொழிகள்தான் செம்மொழி. இதில் இன்றும் தமிழ், சீன மொழிகள் மட்டுமே பழமை மாறாமல் பேசப்படுகிறது.

தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கீகாரம் பெற ரூ. 40 கோடி தேவைப்படுகிறது. மேலும் தமிழ் ஆர்வலர்களால் கனடா மற்றும் யூரோப் நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் பல கோடி செலவில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழி உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராஜேந்திர சோழன் விட்டு சென்ற விழு மீன்கள் மலேசிய நாட்டின் கிடார் என்ற மாநிலத்தில் உள்ளது. இதுதொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது.

1 கோடியே 38 லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கு வெளியே இருக்கின்றனர். உலகில் 3 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் 42% பேர் தமிழர்கள் உள்ளனர். ஒரு காலத்தில் மருத்துவர்களாக தமிழர்கள் அமெரிக்கா சென்றனர். தற்போது ஐ.டி. ஊழியர்களாகச் சென்றுள்ளனர். தமிழக அரசு சார்பில் ரூ. 50 கோடி செலவில் தமிழர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு ரூ. 16 லட்சத்தை பல்கலை. வேந்தர் பாரிவேந்தர், அமைச்சர் க. பாண்டியராஜனிடம் வழங்கினார். முன்னதாக பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x