Published : 12 Feb 2024 04:08 AM
Last Updated : 12 Feb 2024 04:08 AM

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

சென்னை: ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு வரும் 19-ம் தேதிதாக்கல் செய்கிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சட்டம் - ஒழுங்கு,சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம், முதலீடு ஈர்ப்புதொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார்.

இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, அவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, பொது நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார். இந்த காரணங்களால், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்தது.

இந்த சூழலில், மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்நிலையில், கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார்.

பேரவை தலைவர் அழைப்பு: இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவதுஉறுதியானது. பேரவை தலைவர் மு.அப்பாவு, ஆளுநர் மாளிகைக்கு சென்று, பேரவை கூட்டத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது.

இன்று காலை 10 மணி அளவில்ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவை தலைவர் அப்பாவு வாசிக்கிறார்.

அலுவல் ஆய்வு கூட்டம்: இந்த நிகழ்வு முடிந்ததும், அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்றுஇக்கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும். அந்த வகையில்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல்: இதைத் தொடர்ந்து, 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வரும் 19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சட்டம் - ஒழுங்கு, சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலைய விவகாரம், முதலீடு ஈர்ப்புதொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம், போதைப் பொருள்நடமாட்டம் போன்ற பிரச்சினைகளை எழுப்ப அதிமுக உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பேரவையில் ஏற்பாடுகள்: சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்க உள்ளதால், பேரவை அரங்கம் வண்ணம் பூசப்பட்டு,இருக்கைகள், மேஜைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராகியுள்ளது.

சட்டப்பேரவை அரங்கம் அமைந்துள்ள கட்டிடத்தின் முகப்புபகுதி, ஆளுநர், பேரவை தலைவர் வருகை தரும் பகுதிகள், உறுப்பினர்கள் வரும் வாயில்கள், எதிர்க்கட்சி தலைவர் அறை அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட இடங்களும் தயார் நிலையில் உள்ளன.

பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சம்பந்தப்பட்ட உறுப்பினரின் பெயர், தொகுதி, அவர் எழுப்பிய கேள்வி, அதற்கு பதில்அளிக்கும் அமைச்சரின் பெயர்,துறை உள்ளிட்ட விவரங்களை காட்டும் வகையில், பேரவை அரங்கின் சில இடங்களில் திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திரையின் அகலம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இருக்கைகள், உறுப்பினர்களின் முன்பு உள்ள கணினிகள், ஒலிபெருக்கி ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதை பேரவை தலைவர் அப்பாவு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரவை செயலர் கி.சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x