Published : 08 Feb 2018 07:20 AM
Last Updated : 08 Feb 2018 07:20 AM

இலங்கையிலிருந்து ராமேசுவரத்துக்கு 3.7 கிலோ தங்கம் கடத்த முயற்சி: 2 மீனவர்கள் கைது- பரபரப்பான பின்னணி தகவல்கள்

இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு தங்கக் கடத்தலில் ஈடுபட முயன்ற 2 மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கச்சத்தீவு அருகே தங்கம் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (6-ம் தேதி) இரவு நடுக்கடலில் சந்தேகத்துக்குள்ளான வகையில் நின்றுகொண்டிருந்த பைபர் படகில் சோதனை செய்தனர். அப்போது அதில் 3.7 கிலோ கிராம் எடையுள்ள 37 தங்கக் கட்டிகள் இருந்தன.

தங்கக் கட்டிகளையும், படகையும் பறிமுதல் செய்த கடற்படையினர் படகில் இருந்த இரு மீனவர்களையும் கைது செய்தனர். விசாரணையில் அந்த மீனவர்கள் யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், தங்கக் கட்டிகளை ராமேசுவரத்துக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த 20 நாட்களில் இலங்கை கடற்படையினர் தமிழகத்துக்கு கடல் மார்க்கமாக நடைபெற இருந்த 3 கடத்தல் சம்பவங்களை முறியடித்து 22 கிலோ 700 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

பெரும்பாலும் தமிழகத்துக்கு தங்கக் கடத்தல் என்பது துபாய் அல்லது சிங்கப்பூரில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் சில ஆண்டுகளாக கொழும்பில் இருந்து விமானம் மூலம் பயணிகள் மூலமாகவும், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாகவும் தமிழகத்துக்கு தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

6 ஆயிரம் கிலோ தங்கம்

இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்று கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகள் தங்களுக்கு என்று நாணயங்களையோ, பண நோட்டுகளையோ அச்சிட்டுக் கொள்ளவில்லை. மாறாக தங்களின் ஆயுதம் மற்றும் இதர தளவாடங்களை வாங்குவதற்கு தங்கத்தை பரிமாறிக்கொண்டனர் எனக் கூறப்படுவதுண்டு. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னர் விடுதலைப் புலிகள் சேகரித்து வைத்திருந்த 6 ஆயிரம் கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த தங்கம் எங்கே என்ற விவரம் தெரியவில்லை.

விடுதலைப் புலிகளின் தங்கம் புதைக்கப்பட்ட இடங்களை கடந்த 9 ஆண்டுகளாக இலங்கை ராணுவம் தேடிவருகிறது. கடந்த வாரம் இலங்கை நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத் தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடத்தில் அகழ்வாய்வு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். இதற்காக பொக்லைன் இயந்திரத்தை கொண்டு தோண்டியபோது சில அடிகளிலேயே அங்கிருந்து நீர் ஊற்று தொடங்கி விட்டது. இதனால் தங்கம் தேடும் பணியை இலங்கை ராணுவத்தினர் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x