Published : 06 Feb 2018 07:49 PM
Last Updated : 06 Feb 2018 07:49 PM

ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைய ரூ. 1.கோடி நிதி: ஸ்டாலின் அறிவிப்பு

உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் “தமிழ் இருக்கை” அமைவதற்கு திமுகவின் பங்களிப்பாக ரூ. 1 கோடி அளிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு

“அன்னைத் தமிழுக்கு உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் இருக்கை அமைவது தமிழகத்தில் வாழும் ஏழரைக் கோடி தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலகநாடுகளில் எல்லாம் பரவி வாழ்ந்துவரும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் தேனான செய்தியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

“தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு ,தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மன்றம் தீர்மானிக்கிறது” என்று அண்ணா தலைமையில் முதன்முதலில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு 23.1.1968 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியதன் பொன்விழா ஆண்டில், தமிழுக்குக் கிடைக்கப் போகும் “ஹார்வார்டு இருக்கை” என்பது, ஒவ்வொரு தமிழருக்கும் 2 பெருமிதத்தையும் பேருவகையையும் நிரந்தரமாகத் தரும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தைப் பெறப் போராடி வந்த கருணாநிதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் சோனியாகாந்தி மூலம் தமிழ் செம்மொழிப் பிரகடன அறிவிக்கையினை வெளியிடச் செய்தார் என்பது வரலாறு. மேலும் தமிழ்மொழியின் தொன்மையையும், வளத்தையும் இளைய சமுதாயத்தினர் அறிந்து முன்னெடுத்துச் செல்ல வழிவகுத்திடும் வகையில், “ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம்”என “தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006”-ஐ நிறைவேற்றி, அதைச் செயல்படுத்தியும் காட்டினார்.

அதே போல் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக, 2006-ல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த திமுக “தமிழை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஆக்குவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தமிழகச் சட்டமன்றத்தில் 6.12.2006 அன்று புகழ் பெற்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கு ஆளுநர் அவர்களின் ஒப்புதலையும் பெற்று, அந்தத் தீர்மானத்தை 8.12.2006 அன்றே குடியரசுத் தலைவராக இருந்து மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களிடம் டெல்லி சென்று நேரில் வழங்கினார் கருணாநிதி.

சில இடையூறுகளால், அந்தக் கனவு நனவாக இன்னும் தாமதமானாலும் உயர்நீதி மன்றத்திலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழ் நிச்சயம் ஒரு நாள் அரியணை ஏறியே தீரும். ஏனென்றால் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், 3 கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்தது செம்மொழியான தமிழ் மொழி. மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தவழ்ந்திட உரிமையும், தகுதியும் பெற்ற மூத்த மொழியாக தமிழ் இருக்கிறது என்பதை திமுக திடமாகவும், தீர்மானமாகவும் நம்புகிறது.

அதனால்தான் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து திமுக சார்பில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இத்தகைய பின்னணியில், தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் பணியில் திமுகவின் அடுத்த பங்களிப்பாக, ஹார்வார்டு தமிழ் இருக்கை அமைவதற்கு ஒரு கோடி ரூபாயை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதை அனைத்துத் தமிழ் உள்ளங்களுக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும் முதன்மைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் கருணாநிதி சார்பில் இந்த நிதியை அளிப்பதுடன், அந்த உயரிய இருக்கை விரைவில் அமைந்து, தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டுமென ஏழரைக் கோடித் தமிழர்களின் சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x