Last Updated : 06 Feb, 2018 08:29 AM

 

Published : 06 Feb 2018 08:29 AM
Last Updated : 06 Feb 2018 08:29 AM

நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கு ஒரே நீட் தேர்வு: மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது

நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற் றும் ஆயுஷ் படிப்புகளுக்கு ஒரே நீட் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) நடத்தப்படுகிறது. அந்த தேர்வில் தகுதிப் பெறும் மாணவர்களைக் கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீட் தேர்வை நடத்தும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் வெளியிட உள்ளது.

ஒரே நீட் தேர்வு

இந்நிலையில் நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள இந்திய மருத் துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அதன்படி, இந்த ஆண்டு ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதேநேரத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கென்று தனியாக நீட் தேர்வு நடத்தாமல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கு ஆயுஷ் படிப்புகளில் சேர உள்ள மாணவர்கள் விண்ணப்பித்து எழுத வேண்டும்.

நீட் மதிப்பெண்கள்

இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆயுஷ் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 மதிப் பெண் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கென்று தனித்தனியாக நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தாது.

கடந்த ஆண்டுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை வைத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிப்பார்கள்.

நீட் தேர்வு எழுத பிளஸ் 2 தகுதி என்பதால் ஒரே நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்த உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் மருத்துவம் படிக்க விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும்.

நீட் தேர்வில் தகுதிப் பெறும் மதிப்பெண்களை கொண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்து எப்படி விண்ணப்பித்தார்களோ, அதேபோல் இந்த முறை நீட் தேர்வில் தகுதி பெறும் மதிப்பெண்ணை வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

10 மொழிகளில் நீட் தேர்வு

நாடு முழுவதும் கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்பட்டதோ, அதே பாடத்திட்டம் தான் இந்த ஆண்டு நீட் தேர்விலும் பின்பற்றப்பட உள்ளது.

கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடிசா, அஸ்ஸாம், வங்காளம் ஆகிய 10 மொழிகளில் நீட் தேர்வு நடை பெற உள்ளன.

தேவைப்பட்டால் கூடுதல் மொழிகளிலும் நீட் தேர்வு நடத்தப்படும்.

அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் இடம் பெறும். கடந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மட்டும் நீட் தேர்வு நடந்ததால், ஜனவரி 31-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு ஆயுஷ் படிப்புகளுக்கும் சேர்த்து நீட் தேர்வு நடத்தப்படுவதால் நீட் தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x