Last Updated : 06 Feb, 2018 08:45 AM

 

Published : 06 Feb 2018 08:45 AM
Last Updated : 06 Feb 2018 08:45 AM

10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய தகுதியானோர் பட்டியல் தயாரிக்க அரசாணை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு நடவடிக்கை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தகுதி யான நபர்கள் குறித்த பட்டியல் சிறைவாரியாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 31-ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்றஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, “ஆயுள் தண்டனை பெற்று தமி ழக சிறைகளில் 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்த கைதிகளை, சட்டம் மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில், முன்விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அறிவித் தார்.

அதைத் தொடர்ந்து, கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல் கள் மற்றும் நிபந்தனைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு கடந்த 1-ம் தேதி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:

முன்கூட்டியே விடுதலை செய்ய தேர்வு செய்யப்படும் நபர்கள் 2018 பிப்ரவரி 25-ம் தேதிக்குள் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்திருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்தால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது சிறையில் இருந்திருக்க வேண்டும். விசாரணை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களாகவும் இருக்க லாம்.

கைதியின் செயல்பாடுகள் திருப்தியளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அவர்களின் வழக்குகள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435-ன் கீழ் வராதவையாக இருக்க வேண்டும். இதுபோன்ற நிலையில் உள்ளவர்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்க லாம்.

இதன்படி பாலியல் பலாத்காரம், மோசடி, வழிப்பறி, கொள்ளை, தீவிரவாத குற்றங்கள், அரசுக்கு எதிரான குற்றங்கள், சாதி, மத, இன, மொழி தொடர்பான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சித்தது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, கள்ள நோட்டு வழக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்கொடுமை, வரதட்சணை மரணத்துக்கு காரணமானவர்கள், பொருளாதார குற்றங்கள், கள்ளக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்டோர் முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

இதேபோல ஊழல் தடுப்புச் சட்டம், பாலியல் தொழில் தடுப் புச் சட்டம், போதை பொருட்கள் கடத்தல் தடுப்புச் சட்டம், உணவு கலப்படத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மத்திய சட்டங்களின் கீழ் கைதாகி சிறையில் இருப்பவர்களும் விடுவிக்கப்பட மாட்டார் கள்.

மற்ற மாநிலங்களில் தண்டனை பெற்று, தமிழக சிறைகளில் இருப்பவர்களுக்கும், இங்கு தண்டனை பெற்று பிற மாநில சிறைகளில் இருப்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது. எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 25.2.2018-ஐ தகுதி நாளாகக் கொண்டு ஒருமுறை வாய்ப்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதற்குப் பிறகு நீட்டிக்கப்பட மாட்டாது. இதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு ஆயுள் தண்டனை கைதிகள், தங்களை வெளியே அனுப்புமாறு உரிமை கோர முடியாது. வழிகாட்டுதல்கள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதியான நபர்கள் குறித்த பட்டியலை தயாரித்து சிறைத்துறை ஏடிஜிபி அனுப்ப வேண் டும் என அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இதையடுத்து, அரசு நிர்ணயித்துள்ள தகுதிகளுடன் கூடிய கைதிகளின் பட்டியலை சிறைவாரியாக தயாரித்து, வரும் 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கு மாறு சிறைத் துறையின் அனைத்து டிஐஜிக்கள், கண்காணிப்பாளர்களுக்கு சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தகுதியுள்ள கைதிகள் குறித்த விவரங்கள் அனைத்து சிறைகளிலும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி, கைதிகளை விடுவிப்பதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x