Last Updated : 05 Feb, 2024 09:06 PM

 

Published : 05 Feb 2024 09:06 PM
Last Updated : 05 Feb 2024 09:06 PM

“கச்சத்தீவை மீட்க வேண்டும்” - மக்களவையில் தேனி எம்.பி ரவீந்திரநாத் கோரிக்கை

தேனி எம்.பி. ரவீந்திரநாத்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட் விவாதத்தில் இன்று தேனி தொகுதி எம்பியான ஓ.பி.எஸ்.பி.ரவீந்திரநாத் உரையாற்றினார். அதில் அவர், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

தனது உரையில் தேனி மக்களவை தொகுதி எம்பியான ஓ.பி.எஸ்.பி.ரவீந்திரநாத் பேசியது: “நமது சுதந்திர இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மூன்று ஜனாதிபதிகளை தந்துள்ளது. டாக்டர்.அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த் மற்றும் திரவுபதி முர்மு. இவர்களில் சமூகங்கள் முறையே சிறுபான்மை, தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் ஆவர். சுதந்திர இந்தியாவில் இத்தகைய சமூகத்தினருக்கு இப்படி ஒரு வாய்ப்பை இதுவரை எந்த அரசாங்கமும் தரவில்லை என்பதை நான் பதிவு செய்கிறேன்.

அதுபோல இந்த புதிய நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் தலைவர் உள்ளே வரும்பொழுது அவருக்கு முன்பாக தமிழகத்திலிருந்து பெறப்பட்ட செங்கோல் வந்தது. இது, தமிழகத்துக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் ஒரு பெருமை மிகுந்த விஷயமாகும். அதுபோல ஐக்கிய நாடுகளில் சபையில் நம் பாரத பிரதமர்கள் பலரும் பேசியுள்ளனர். இவர்களில், தமிழில் பேசிய ஒரே பிரதமர் நரேந்திர மோடி. அதுபோல தமிழின் பெருமையை பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றவர் பிரதமர். சுதந்திர இந்தியாவிலும், நம் நாட்டிலும் பிறந்து முதன் முதலாக பிரதமராக ஆட்சி செய்தவர் என்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடியை சாரும். அதுபோல ’மேக் இன் இந்தியா’ மூலம் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் பிரதமர் . இங்கே பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் வைத்தார்கள்.

தமிழகத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் இப்போது நமது ராமர் கோயில் அயோத்தியில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்டுள்ளது. இதை சீரும் சிறப்புமாக இந்தியாவின் உடைய ஒவ்வொரு குடிமகனுடைய கனவை நிறைவேற்றி இருக்கிறார் பிரதமர் மோடி . ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன்பாக தமிழகத்துக்கு சென்ற பிரதமர், ஸ்ரீரங்கம் கோயில், தென்கோடியின் ராமேஸ்வரம் கோயிலில் வழிபட்டு வந்தார். 17-ம் நூற்றாண்டில், ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக அங்குள்ள கச்சத்தீவு இருந்தது.

மக்கள் வசிக்காத இந்த பகுதி, ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமாக இருந்தது. அந்த சேதுபதி மன்னர் வெளியிட்ட செப்பு பட்டையில் கச்சத்தீவையும் அதையும் தாண்டி இலங்கை தலைமன்னார் வரைக்கும் நமது ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1822 -ம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, ராமநாதபுரம் சமஸ்தானத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி கச்சத்தீவு உட்பட ராமநாதபுரம் சமாதானத்துக்குட்பட்ட நிலப்பரப்பை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக் கொள்ள உரிமை வழங்கப்பட்டது.

ஆக, வரலாற்றை எடுத்துப் பார்த்தால் கச்சத்தீவு என்பது இந்தியாவின் ஒரு பகுதியாகவும், தமிழகத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. ஆனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அந்த கச்சத்தீவை இலங்கை பிரதமர் பண்டாரநாயக்காவிடம் தந்துவிட்டார். அதை இந்த நாடாளுமன்ற அவையில் விவாதிக்காமாலே, கச்சத்தீவைப் பரிசாக இலங்கைக்கு கொடுத்து விட்டார். இன்று, ஜம்மு-காஷ்மீரில் மக்கள் நன்றாக வாழ சட்டத்தை இயற்றுகிறோம். அதேசமயம், எதிர்க்கட்சியினரால் நாம் இழந்த அந்த கச்சத்தீவை மீட்டெடுக்க இதுவரையும் எவரும் போராடவில்லை என்பது வருத்தமான செயல். ஆனால் பிரதமருக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன்.

இழந்த கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெற்றுத் தர வேண்டும். அதுபோல பிரதமர் தனது 2019 குடியரசு தின உரையில் பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டுள்ளார்.

இது, கட்டமைக்கக்கூடிய புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு புதியபாதை அமைந்திருக்கின்றது என்று சொன்னார். அவர், 2019 முதல் 2024 வரை இந்தியாவின் புதிய பாதை அமைத்து அடுத்த வளர்ச்சிக்காக வல்லரசு நாடாக நம்முடைய இந்தியா வளர்வதற்கு வித்திட்டிருக்கிறார். வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மோடி, பிரதமராகத் தொடருவார், என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x