Published : 03 Feb 2024 04:49 PM
Last Updated : 03 Feb 2024 04:49 PM

பிரதமர் மோடி பிப்.25-ல் பல்லடம் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு: தமிழக பாஜக தகவல்

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள  மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோர். படம்: இரா.கார்த்திகேயன்.

திருப்பூர்: பல்லடம் அருகே மாதப்பூரில் வரும் 25-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் திருப்பூரில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: “பல்லடம் அருகே மாதப்பூரில் 25-ம் தேதி பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணமான ’என் மண் என் மக்கள் யாத்திரை’ நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளோம். 400 ஏக்கர் பரப்பளவில், அனைத்து அரசியல் கட்சிகளும் திரும்பி பார்க்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை கூட்ட உள்ளோம். முன்னதாக 24-ம் தேதி மாநிலத் தலைவர் அண்ணாமலை திருப்பூர் மாநகராட்சி தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை யாத்திரை மேற்கொள்கிறார்.

25-ம் தேதி மதியத்துக்கு மேல் நடக்கும் பொதுக்கூட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பேசுகிறார். தமிழ்நாட்டின் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேசியத் தலைவர்களும் பங்கேற்பார்கள். தமிழகத்துக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் மோடி. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சமூகம், பொருளாதாரம் மற்றும் அமைப்பு ரீதியாக மாற்றம் ஏற்படும். அடுத்த தேர்தலுக்காக பாஜக இல்லை. அடுத்த தலைமுறைக்கு தான் பாஜக. முதல்முறையாக நாட்டின் பாதுகாப்புக்கு செலவு செய்யும் தொகை குறைந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு அந்த தொகை செலவிடப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் உயர்கல்விக்கு ஒரு பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுகவை கேள்வி கேட்கும் முதல்நிலை கட்சியாக தமிழ்நாட்டில் பாஜக உள்ளது. தமிழ்நாட்டில் அமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பொய்யை, அண்ணாமலை தனது சுற்றுப்பயணத்தில் சொல்லி வருகிறார். குளறுபடிகளின் ஒட்டுமொத்த அம்சமாக திமுக உள்ளது. சட்டப்பேரவைத் தொகுதி வாரிய சொல்லப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் பொய்.

ஹேமந்த் சோரன் குற்றம் செய்தததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு வெவ்வேறு திசைகளில் உள்ளன. காவல் துறை மீது பயம் இல்லாததால் சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம். அவர் அறிவாலயத்தை தான் குற்றம் சாட்டி உள்ளார். பாஜகவின் ஹெச்.ராஜா ’ஜோசப் விஜய்’ என்று சொன்னது, அன்றைய காலகட்டத்தை வைத்து சொன்னது. பாஜக லட்சியத்துக்காக சென்று கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் அங்கீகாரம் குறைந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக உதயநிதியை நிறுத்த பார்க்கிறார். அண்ணாமலைக்கு ஈடுகொடுக்க முடியுமா என்றுதான் நகர்கிறார்கள். அனைவரும் சேர்ந்து தான் அரசியல் நகர்வை நகர்த்த முடியும். அதனை செய்ய விஜய் உட்பட அப்படிப்பட்ட யாராக இருந்தாலும் வரவேற்கிறோம். பாஜகவுக்கு மக்கள் தரும் அங்கீகாரத்தை வரும் 25-ம் தேதி பல்லடத்தில் நடக்கும் கூட்டத்தில் பார்ப்பீர்கள்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x