Published : 24 Jan 2024 04:04 AM
Last Updated : 24 Jan 2024 04:04 AM

‘என் மண் என் மக்கள்’ யாத்திரையால் மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றம்: அண்ணாமலை நம்பிக்கை

படம்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்: என் மண் என் மக்கள் யாத்திரை, மக்கள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தாம்பரம் - திருநீர் மலை பிரதான சாலையில் கடப்பேரி பகுதியில் தமிழ்நாடு பாஜகவின் முதல் மாநில தலைவர் கே.நாராயண ராவ் இல்லம் உள்ளது. இந்நிலையில் மறைந்த கே.நாராயணராவின் மனைவி வசுந்தராதேவி கடந்த 21-ம் தேதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி பாஜக சார்பில் இரங்கல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது: என் மண், என் மக்கள் யாத்திரையை மீண்டும் தொடங்குகிறேன். 151-வது தொகுதியில் இந்த யாத்திரையை தொடங்குகிறோம். திருவிடைமருதூர், மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று தொகுதிகளில் அடுத்த 20 நாட்கள் ஓய்வு இல்லாமல் வேகமாக போய்க்கொண்டே இருக்கிறோம். 60 தொகுதிகளில் இந்த யாத்திரையை தொடர இலக்கு வகுக்கப்பட்டுள்ளது. 150-வது தொகுதியாக ஓசூரில் இந்த யாத்திரை நடைபெற்றது.

மிகப்பெரிய எழுச்சியுடன் இந்த யாத்திரை நடைபெற்று கொண்டிருக்கிறது. நிறைய புதியவர்கள், அரசியலில் நடுநிலையானவர்கள், மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள், குறிப்பாக சகோதரிகள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரும் இந்த யாத்திரையை, தங்களுடைய யாத்திரையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த என் மண், என் மக்கள் யாத்திரை மூலம் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஒரு எக்ஸ்ரே மாதிரி படம் பிடித்து காட்டுகிறோம்.

இந்த யாத்திரை மக்கள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக எதிரொலித்து, மிகப் பெரிய மாற்றம் நிகழும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து பிரதமரிடம் கேட்டுள்ளோம். பொறுமையாக நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்து நீதிமன்ற உத்தரவு வந்த பின்னர் ராமர் கோயிலை கட்டினோம்.

அதே நேரத்தில் நீதிமன்றம் போக வேண்டும், அங்கேயும் சாதகமான தீர்ப்பை வாங்கி வந்து கோயில் மற்றும் தனியார் இடங்களில் விழா நடத்த வேண்டும் என்று ஒரு சர்வாதிகாரித்தனமாக ரஷ்யாவின் ஸ்டாலின் ஆட்சி போல தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x