Published : 07 Feb 2018 10:03 AM
Last Updated : 07 Feb 2018 10:03 AM

கிருஷ்ணகிரியில் தமிழக ஆளுநர் ஆய்வு: திமுகவினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம்

கிருஷ்ணகிரி அருகே தூய்மை பாரத திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்தார். திமுக-வினர் அவருக்கு கறுப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் நடந்த 50-வது இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நிறைவு விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஆளுநர் பேசுகையில், ‘‘ஏழை மக்களுக்கு சேவை செய்வது, இறைவனுக்கு சேவை செய்து ஆகும். தமிழ் மொழி பேசுவதற்கும், கற்றுக் கொள்ளவும் இனிமையான மொழி. நான் தமிழை ஆசிரியர் ஒருவரது உதவியுடன் கற்று வருகிறேன்,’’ என்றார்.

இதனைத் தொடர்ந்து திம்மாபுரம் கிராமத்தில் தூய்மை பாரத திட்டப் பணிகளை ஆளுநர் ஆய்வு செய்தார். அங்கு சூழல்மேம்பாட்டு கழிப்பறை, உறிஞ்சிக்குழல் கழிப்பறை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். தூய்மை பாரத இயக்கத்தின் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி, தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். இலவச மருத்துவ சிகிச்சை முகாமில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவற்றை வழங்கினார். அரசின் நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பயணியர் மாளிகையில் பொதுமக்களிடம் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹிித் மனுக்களை பெற்றார்.

இதில், கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நீடிப்பு உபரிநீர் இடதுகால்வாய் பயன்பெறுவோர் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘கடந்த 2013-ம் ஆண்டு பாலேகுளி முதல் சந்தூர் வரை 28 ஏரிகளுக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. இதற்காக குறுகிய நிலம் மற்றும் மரங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம். இழப்பீடு கேட்டு 5 ஆண்டுகளாக பல முறை மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்,’’ என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கறுப்புக்கொடி

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று காலை சப்பானிப்பட்டி மற்றும் திம்மாபுரம் ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு சாலை வழியாக பயணியர் மாளிகைக்கு காரில் சென்றார். அப்போது சுங்கச்சாவடி அருகே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., தலைமையில் திரண்டிருந்த 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் கறுுப்பு கொடிகளை கையில் ஏந்தியும், கறுப்பு சட்டை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x