Published : 28 Jan 2024 12:23 PM
Last Updated : 28 Jan 2024 12:23 PM

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மக்களிடம் பணம் ‘வசூல்’ - விசாரணை நடத்த உத்தரவு

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடலை பெறும் உறவினர்களிடம் பணம் வசூலிப்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.

“இந்து தமிழ் திசை” நாளிதழில் ஜன.24-ம் தேதி “ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம் – பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடலை பெற ரூ.2,000, ரூ.3,000 வசூல் – கடன் வாங்கியாவது கொடுக்கும் ஏழை மக்கள்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் அளித்துள்ள விளக்கம் வருமாறு: மருத்துவக் குழுவினரின் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இறப்பவர்களுக்கு வழக்கு தொடர்பு இருந்தால், அவர்களின் உடல் கட்டாய பிரேதப் பரிசோதனை செய்த பிறகு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப் படுகிறது. உறவினர்களிடம் நேரடியாக வழங்குவதில்லை. மருத்துவமனையில் ஊழல் புகார்கள் மற்றும் லஞ்சம் பெற முயற்சி செய்தால், லஞ்ச ஒழிப்பு அதிகாரியை தொடர்பு கொள்ள வசதியாக எல்லா இடங்களிலும் விஜிலன்ஸ் தொடர்பு எண் ஒட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தளத்திலும் ஆலோசனைப் பெட்டி சிவப்பு நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில் பெறப்படும் புகார் கடிதங்கள் மீது வாரம் தோறும் சனிக் கிழமைகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. செய்தியில் குறிப்பிட்டவாறு எந்தவித புகாரும் இதுவரை பெறவில்லை. மருத்துவமனையில் இணை பேராசிரியர் தலைமையில் 3 உதவி பேராசிரியர்களுடன் விஜிலன்ஸ் கமிட்டி இயங்கி வருகிறது. இந்த குழுவின் உதவியுடன் இப்புகார் குறித்து முழு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x