Published : 07 Feb 2018 09:59 AM
Last Updated : 07 Feb 2018 09:59 AM

ம.பி. மாற்றுத்திறனாளி இளைஞர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்

பசுமை இந்தியா, சுகாதார இந்தியா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் நேற்று திருநெல்வேலிக்கு வந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் பிரதீப்குமார்(30). மாற்றுத்திறனாளியான இவர், சைக்கிளில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, நேற்று திருநெல்வேலிக்கு வந்தார். ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, தனது விழிப்புணர்வு பிரச்சார பயணம் குறித்து கூறினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

பி.காம் படித்துள்ளேன். சில இந்தி படங்களில் துணை நடிகராகவும், டாக்குமென்டரி படங்களிலும் நடித்துள்ளேன். பசுமை இந்தியா, சுகாதார இந்தியா, சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கடந்த ஆண்டு நவம்பர் மாத 14-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து சைக்கிளில் பிரச்சார பயணத்தைத் தொடங்கினேன்.

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் செய்து, தமிழகத்துக்கு வந்துள்ளேன். செல்லும் வழியெங்கும் பொதுமக்கள் உணவு, தங்குமிட வசதி செய்து தருகின்றனர். இதுதான், எனக்கு ஊக்கம் அளிக்கிறது.

நாளொன்றுக்கு 50 முதல் 100 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பயணிக்கிறேன். பிப்ரவரி 3-ம் தேதி தமிகத்துக்குள் நுழைந்தேன். இதுவரை 4,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளேன். ஜூன் மாதம் எனது பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளேன். கடந்த 2013-ம் ஆண்டு ஒரு ரயில் விபத்தில் எனது இடது காலை இழந்தேன். செயற்கைக் காலுடன் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறேன். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளை சந்தித்து எனது நோக்கத்தை தெரிவித்து, சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x