Last Updated : 25 Jan, 2024 05:10 PM

1  

Published : 25 Jan 2024 05:10 PM
Last Updated : 25 Jan 2024 05:10 PM

‘தூத்துக்குடி இடுக்கண் களைவோம்’ - வெள்ள பாதிப்புகளை சீரமைக்க இணையதளம் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'தூத்துக்குடி இடுக்கண் களைவோம்' புதிய இணையதளத்துக்கான இலட்சினையை கனிமொழி எம்பி வெளியிட்டார். உடன் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர். | படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பு செய்திட பெரு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்காக 'தூத்துக்குடி இடுக்கண் களைவோம்' என்ற புதிய இணையதளத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18 தேதிகளில் பெய்த அதி கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாவட்டத்தில் உள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்காக 'தூத்துக்குடி இடுக்கண் களைவோம்' என்ற புதிய இணையதளம் மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், சீரமைப்பு செய்யப்பட வேண்டிய இடங்கள், தேவைகள் உள்ளிட்டவை படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உதவி செய்ய விரும்புவோர் தாங்கள் செய்ய விரும்பும் உதவி, பகுதியை தேர்வு செய்து உதவி செய்யலாம். நேரடியாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிகளை செய்யலாம். மேலும், தாங்கள் விரும்பும் உதவிக்கான தொகையை செலுத்தலாம். அதற்கான வங்கி கணக்கு விபரம், யுபிஐ எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த புதிய இணையதளத்தின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா வரவேற்றார்.

: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'தூத்துக்குடி இடுக்கண் களைவோம்' புதிய இணையதளத்தை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர். ’ படம்: என்.ராஜேஷ்

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு புதிய இணையதளத்தின் இலட்சினையை வெளியிட்டு, இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ''தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18 தேதிகளில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் இருக்கும் குடியிருப்பு பகுதிகள், அரசு கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், மருத்துவமனை உபகரணங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் சேதடைந்துள்ளது.

இந்த பாதிப்புகளை சீரமைப்பு செய்வதற்காக மாவட்டத்தில் உள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்காக 'தூத்துக்குடி மாவட்ட நிர்வாக செசைட்டி' உருவாக்கப்பட்டு அதன் மூலம் 'தூத்துக்குடி இடுக்கண் களைவோம்' என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மட்டுமல்லாமல் மக்களுக்கு உதவ விரும்பும் நிறுவனங்களுக்காக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது'' என்றார் அவர்.

ரூ.10 லட்சம்: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தூத்துக்குடி, ஏரல் வட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1.40 லட்சம் மதிப்பிலான 7 மாவரைக்கும் இயந்திரங்களை வழங்கியுள்ளார். இதனை கனிமொழி எம்பி மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கினார். தொடர்ந்து 'இடுக்கன் களைவோம்' நிவாரணத்துக்காக கனிமொழி எம்பி தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாக செசைட்டி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த உபகரணங்களை வாங்குவதற்காக ரூ.9.58 லட்சத்துக்கான காசோலையை சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வனிடம் கனிமொழி எம்பி வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), மாவட்ட காவல் கண்காணிப்பாலர் எல்.பாலாஜி சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x