Published : 25 Jan 2024 06:20 AM
Last Updated : 25 Jan 2024 06:20 AM

சென்னையில் குற்றங்களை குறைக்க 3 செயலிகள்: டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் முதியோர்களுக்கு உதவும் ‘பந்தம்’ உட்பட, குற்றங்களைக் குறைக்கும் 3 செயலிகளை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். காணாமல் போன வாகனங்களைக் கண்டுபிடிக்கவும், அந்த வாகனங்களை, குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், ரூ.1.81 கோடி செலவில் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு ‘ஐவிஎம்எஸ்’ (IVMS - Integrated Vehicle Monitoring System) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, காணாமல் போன வாகனங்களின் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் ஐவிஎம்எஸ்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு, சென்னை பெருநகரகாவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில், 75 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் நெருக்கடியான இடங்களில், கூடுதலாக 50 நகரும் கேமராக்களும் தேவைக்கேற்ப நிறுவப்பட உள்ளன.

இந்த கேமராக்களில் பதிவாகும் வாகனங்கள் மற்றும் சந்தேக வாகனங்களின் பதிவு எண்களை அடிப்படையாக வைத்து திருட்டு வாகனங்கள் போலீஸாரால் அடையாளம் காணப்பட்டு கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள்.

சென்னையில் 24 மணி நேரமும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் தளமாக ‘பருந்து’ செயலி செயல்படுகிறது. இந்த திட்டத்தில் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவரும்போது அல்லது சிறையில் இருந்து விடுவிக்கும்போது உடனடியாக அந்த விவரங்களை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தியாக இச்செயலி அனுப்பும். இச்செயலி, சென்னை பெருநகரக் காவலுக்குட்பட்ட எல்லையில் குற்றங்களைத் தடுக்க பெரும் பங்காற்றும்.

சென்னையில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், தனியாக வசிப்பவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேகமாக ‘பந்தம்’ செயலிதயாரிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் விவரங்கள்சேகரிக்கப்பட்டு, காவல்துறை மூலம் அவர்களைக் கண்காணித்தல், அவசர தேவைக்கு உதவுதல், மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல் என பல உதவிகளைச் செய்ய ‘பந்தம்’ செயலி உதவும். அவசரத் தேவைகளுக்கு மூத்தகுடிமக்கள் காவல்துறையின் கட்டணமில்லா உதவி எண். 94999 57575-ஐ அழைக்கலாம்.

சென்னை காவல் துறையில், காவல் நிலையங்கள், காவல் அதிகாரிகள், இணையதளம் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களைஒருங்கிணைத்து அவற்றைக் கண்காணிக்கவும், விசாரணை முறைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்து மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ‘நிவாரணம்’ செயலி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த 3 செயலிகளின் பயன்பாட்டை, வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், ஆணையர் சந்தீப் ராய் முன்னிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘மூத்த குடிமக்களைப் பாதுகாக்கவே ‘பந்தம்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மீதம் உள்ள திட்டங்களும் குற்றச்செயல்களை குறைக்கும் வகையிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன’’ என்றார்.

காவல் ஆணையர் பேசும்போது, ‘‘சென்னையில் இதேபோல் இன்னும் பல திட்டங்கள் விரைவில் கொண்டுவரப்பட உள்ளன’’ என்றார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள்பிரேம் ஆனந்த் சின்ஹா, சுதாகர், அஸ்ரா கார்க்,செந்தில் குமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x