Last Updated : 24 Jan, 2024 09:02 PM

11  

Published : 24 Jan 2024 09:02 PM
Last Updated : 24 Jan 2024 09:02 PM

“திமுக, அதிமுகவை  ஒரே தூரத்தில் வைத்துள்ளது பாஜக” - ம.பி முன்னாள் முதல்வர் சவுகான் @ மதுரை

மதுரையில் பாஜக நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகத்தை மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் திறந்துவைத்தார்.

மதுரை: “தமிழகத்தில் திமுக, அதிமுகவை ஒரே தூரத்தில் வைத்து பாஜக பார்க்கிறது” என மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகத்தை மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங்சவுகான் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் 400 இடங்களிலும், தமிழகத்தில் 25 இடங்களிலும் பாஜக வெற்றி பெறும். இதற்காக 5515 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசும் போது தமிழ் கலச்சாரங்களை குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இருப்பவர்களை விட பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழகம், தமிழுக்காக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

தமிழகத்துக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல. கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.2.47 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ரூ.95 ஆயிரம் கோடிதான் தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் 62 லட்சம் வீடுகளில் கழிப்பறை, 56 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக, அதிமுகவை ஒரே தூரத்தில் வைத்து தான் பாஜக பார்க்கிறது. எதிர்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் பெரிய ஊழல் கட்சி திமுக. திமுக அமைச்சர்களில் ஒருவர் சிறையிலிருக்கிறார். இன்னொருவர் ஜாமீனில் உள்ளார். மதுரை எம்பி வெங்கடேசன் திறமையானவர் இல்லை” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளரும், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளருமான கதலி நரசிங்கபெருமாள், மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x