மக்களவைத் தேர்தல் 2024 | ‘உ.பி.யில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி’

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் புலந்த்சாஹர் நகரில் நாளை (வியாழக்கிழமை) நடக்கும் பாஜக தேர்தல் பேரணியில் இருந்து இந்தாண்டு (2024) நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா திங்கள்கிழமை (ஜன.22) கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள புலந்த்சாஹரில் நாளை பாஜகவின் பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேரணி பாஜகவின் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக, உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பிராந்திய நகரத்தில் கட்சித் தொடண்டர்கள், தலைவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள 14 தொகுதிகளில் பாஜக கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதே வெற்றியை 2024 தேர்தலிலும் பெற உழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. நாளை பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கும் பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இதனிடையே, ராஷ்ட்ரீய லோக் தளத்துடன் கூட்டணி அறிவித்த அடுத்த நாளில், மாநிலத்தில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் கட்சி ஆதரவாளர்களின் பெயர்கள் புதிய வாக்களர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கட்சியினரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அவர் மாநில பாஜக அரசு, சில கட்சித் தொண்டர்களின் பெயர்களை வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பதாக குற்றம்சாட்டினார். தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து விவாதிக்க முன்னாள் எம்.பி.கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்எல்சிகளுடன் ஒரு சந்திப்பு நடத்த உள்ளார். அதேநேரத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே மக்களவைத் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இந்தாண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடக்கலாம் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in