Published : 24 Jan 2024 07:25 AM
Last Updated : 24 Jan 2024 07:25 AM
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்ச்சியை நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் மொத்தம் 7 மண்டலங்களாக பிரித்து நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட நிகழ்வு மதுரையில் வரும் ஜனவரி 29-ம் தேதி நடைபெறவுள்ளது. இதை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலர் ஜெ.குமர குருபரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
அந்தவகையில் மதுரை மண்டலத்தில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து ஒரு பள்ளிக்கு தலா 4 பெற்றோர், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என சுமார் 30,000 பேர் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிகழ்வில் பள்ளி மேம்பாடு தொடர்பாக பெற்றோருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துரையாடுவார் எனவும் கல்வி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT