Published : 10 Feb 2018 07:27 AM
Last Updated : 10 Feb 2018 07:27 AM

முதுமலையில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம்: 52 யானைகளுக்கு 48 நாட்கள் ஓய்வு

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கான நல வாழ்வு முகாம் நேற்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் முதுமலை யில் 2003 முதல் நடத்தப்பட்டு வந்த கோயில் யானைகளுக்கான முகாம், முதுமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டதால், 2012 முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு உட்பட்ட தேக்கம்பட்டிக்கு மாற்றப்பட்டது. கோயில், மடங்களின் யானைகளுடன், வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ள யானைகளுக்கும் 48 நாட்கள் ஓய்வு அளிக்கப்படும்.

இந்த ஆண்டு முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கான 10-வது நல வாழ்வு முகாம் நேற்று தொடங்கியது.

முதுமலையில் 22, ஆனைமலையில் 23, அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் 4, சேலம் குரும்பர்பாடியில் 1, சாடிவயலில் 2 என மொத்தம் 52 வளர்ப்பு யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கப்படுகிறது.

முதுமலை அடுத்த தெப்பக்காட்டில், நல வாழ்வு முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். யானைகளுக்கு கரும்பு, வாழை, தேங்காய், பழங்கள் வழங்கப்பட்டன. அமைச்சர் கூறும்போது, ‘‘இம்முகாம், மார்ச் 28 வரை நடைபெறும். இதற்காக ரூ.61.16 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாணை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், வளர்ப்பு யானைகள் முகாம் தாமதாக தொடங்கப்பட்டது’’ என்றார்.

யானை சவாரி ரத்து

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி கூறும்போது, ‘‘யானைகளுக்கு தினமும் சத்தான உணவு அளித்து, உடல் பரிசோதனை செய்யப்படும். நோய் தாக்குதல் இருந்தால் சிகிச்சை அளிக்கப்படும். முழு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வழக்கம்போல அனுமதிக்கப்படுவர்’’ என்றார். வன அலுவலர்கள் ராஜ்குமார், பி.கே.திலீப் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x