Published : 06 Feb 2018 07:33 AM
Last Updated : 06 Feb 2018 07:33 AM

பொது இடங்கள், பொதுக்கூட்டங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் பொது இடங்கள், பொதுக்கூட்டங்கள், வழிபாட்டு ஸ்தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி மற்றும் அதிக சப்தம் எழுப்பும் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கம் ஒன்றின் செயலர் சி.ஜெயராமன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

காட்டூரில் உள்ள அற்புத குழந்தை யேசு ஆலயத்தில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆலயத்தின் வெளிப்பகுதியில் நிரந்தரமாக 8 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பொருத்தி எப்போதும் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதியில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பொருத்துவதால் அதிகளவில் ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக முதியோர், பெண்கள், குழந்தைகள், உடல் நலம் குன்றியோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆலயத்தில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை தடை செய்யவும், பங்கு தந்தை மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆலயத்தில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஒலி மாசு பிரச்சினை மாநிலம் முழுவதும் உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனால் பொது இடங்களிலும், பிற இடங்களிலும் ஒலி மாசுவை கட்டுப்படுத்த கீழ்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 2000-ம் ஆண்டின் ஒலி மாசு (வரைமுறைப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல்) விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

பொது இடங்கள், மத வழிபாட்டு இடங்களில் தடையை மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மாநிலத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தாமல் இருப்பதையும், பிற வரையறுக்கப்பட்ட சப்த அளவை தாண்டி ஒலிக்கும் ஒலிபெருக்கியை பயன்படுத்தாமல் இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் நலனுக்காக மாநிலத்தில் பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி, அதிக சப்தம் வரும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.

ஒலி மாசு (வரைமுறைப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல்) விதியை மீறுவோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், உபகரணங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். பொதுக்கூட்டங்களில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதிலும் இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவு நகலை பொதுத்துறை செயலர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்ப வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x