Published : 13 Jan 2024 09:17 PM
Last Updated : 13 Jan 2024 09:17 PM

மனித - வனவிலங்கு மோதல் உயிரிழப்புக்கான நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தியது தமிழக அரசு

சென்னை: மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான தமிழக அரசின் செய்தி குறிப்பு: மனித வனவிலங்கு மோதல்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மனித -வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு 3.11.2021 அன்று அரசாணை வெளியிட்டது.

அதன்படி இத்தகைய மோதல்களில் மனித உயிர் இழப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி (Corpus Fund) ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த முறையீடுகளை மிகுந்த பரிவுடன் பரிசீலனை செய்து இத்தகைய நிகழ்வுகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் சிரமங்களைக் களைவதற்காக, மனித உயிர் இழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பதை ரூபாய் 10 லட்சமாக இரு மடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x