Published : 13 Jan 2024 07:50 PM
Last Updated : 13 Jan 2024 07:50 PM

தூய்மையான நகரங்கள் பட்டியலில் 199-வது இடத்தில் சென்னை: தினகரன் சரமாரி கேள்வி

சென்னை: இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் சென்னை 199-வது இடம்பிடித்துள்ளது சென்னை மாநகராட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளும் தூய்மைப் பணிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகச் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

2023-ம் ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூர், சூரத் ஆகியவை முதலிடம் பிடித்துள்ளன. தூய்மையான நகரத்திற்கான முதல் விருதை துறைமுக நகரமான சூரத், 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்த இந்தூருடன் இணைந்து பெற்றது. இதனிடையே, இந்தப் பட்டியலில் சென்னை 199-வது இடம்பிடித்துள்ளது சென்னை மாநகராட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளும் தூய்மைப் பணிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகச் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் மேலும் கூறுகையில், "இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் நூறு இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நகரம் கூட இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள தூய்மையான நகரங்களின் பட்டியலில் திருச்சி 112 வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முதல் நூறு தூய்மையான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுவந்த சென்னை, நடப்பாண்டில் 199வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் சென்னை மாநகராட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளும் தூய்மைப் பணிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.

சாலை, மெட்ரோ மற்றும் மழைநீர் வடிகால் ஆகிய மூன்று பணிகளும் முறையான திட்டமிடலின்றி ஒரே நேரத்தில் நடைபெறுவதாலே சென்னை மாநகராட்சியில் மாசு அதிகரிக்க காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த பழனிசாமி ஆட்சிக் காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், தன் அறிக்கையை சமர்ப்பித்து ஓராண்டை கடந்த நிலையிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது திமுக அரசின் மீதான சந்தேகத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

எனவே, தூய்மை, குப்பை சேகரிப்பு, சுகாதாரம், கழிவுநீர் அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x