Last Updated : 12 Jan, 2024 05:54 PM

2  

Published : 12 Jan 2024 05:54 PM
Last Updated : 12 Jan 2024 05:54 PM

கிராம அஞ்சல் நிலையத்தின் நடைமுறைச் சிக்கல்கள்... - ஒரு பார்வை

விழுப்புரம் மாவட்டம் பள்ளித்தென்னலில் இயங்கும் கிராம அஞ்சல் நிலையம்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ளது பள்ளித்தென்னல் கிராமம். “இங்கு இயங்கி வரும் கிளை அஞ்சல் நிலையத்தில் பொதுமக்கள் நிற்பதற்கு கூட இடமளிக்காமல் வீட்டின் உரிமையாளர் டிராக்டர் உள்ளிட்ட விவசாயக் கருவிகளை வைத்துள்ளார். இதனால் அஞ்சல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் அஞ்சல் வில்லைகள் வாங்கவும், அஞ்சல் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தவும் மிகவும் சிரமப்படுகிறார்கள்” என்று நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ பகுதிக்கு புகார் வந்தது.

இது குறித்து அஞ்சல் துறையினரிடம் விசாரித்தபோது, கிராமப்புற அஞ்சல் நிலையங்களின் செயல்பாடுகள், அவற்றின் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து அவர்கள் அளித்த விவரங்கள் பின்வருமாறு: புதுச்சேரி அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 22 துணை அஞ்சல் நிலையங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கிராமங்களில் இயங்கும் இந்த அஞ்சல் நிலையங்களை அக்கிராமத்தில் உள்ள உதவி அஞ்சல் ஊழியர் தன் குடியிருப்பின் ஒரு பகுதியில் வைத்து, அதை இயக்குவார். இந்த அஞ்சல் நிலையத்துக்கு அஞ்சல்துறை மாதம் ரூ. 500 வாடகையாக அளிக்கும்.

100 நாள் வேலைத்திட்டப் பயனாளிகளுக்கு பணம், முதியோர் ஓய்வூதியம், இந்தியா போஸ்டல் பேமன்ட் வங்கி மூலம் பணப்பரிமாற்றம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகைகள் ஆகிய விநியோகங்கள் கிராமத்தில் இந்த கிராமப்புற அஞ்சல் நிலையங்களை இயக்கி, அதில் பணியாற்றும் உதவி அஞ்சல் ஊழியர் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் அரசு மற்றும் தனியார் வேலைக்கு விண்ணப்பித்தோருக்கான அழைப்பாணைகள், நீதிமன்ற கடிதங்கள், வழக்கு தொடர்பான அஞ்சல்கள், கிராமப்புறங்களில் உள்ள மத்திய - மாநில அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அலுவல் ரீதியான அஞ்சல்கள் அனைத்தும் அஞ்சல்துறை மூலமே அனுப்பப்படுகின்றன. இதைக்கொண்டு இந்த கிராமப்புற அஞ்சல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த கிராம அஞ்சல் நிலையத்தில் ஒரு கிராம அஞ்சல் அலுவலர், ஒரு கிராம அஞ்சல் ஊழியர் இருக்க வேண்டும். கிராம அஞ்சல் அலுவலருக்கு ரூ.17 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. கிராம அஞ்சல் ஊழியர் ரூ.14 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

பகுதி நேர பணியாளர்களாகவே கணக்கில் எடுத்துக் கொண்டு இவர்கள் பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த கிராம அஞ்சல் அலுவலகத்தை பணிநாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், தொடர்ந்து 12 மணி முதல் 2 மணி வரையிலும் இயக்கினால் போதும். ஆனால், அதைத்தாண்டி, தங்கள் கிளை பகுதிக்கான தலைமையகமாக உள்ள கிளை அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று தங்கள் பகுதிக்கான அஞ்சல்களைப் பெற்று வர வேண்டும். இதற்காக காலை 7.30 மணிக்கே அவர்கள் அங்கு சென்று வர வேண்டும்.

இதில் பணியாற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்தச் சூழலில், கிராமின் தக் சேவக்ஸ் (ஜிடிஎஸ்) உள்ளிட்ட கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஊதிய அமைப்பு மற்றும் பிற சமூகப் பாதுகாப்புப் பலன்கள் குறித்து ஆராய, அரசால் கமலேஷ் சந்திரா அமைக்கப்பட்டது.

இந்த கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கான ஊதியச் சிக்கல்கள் உள்ளிட்டவைகளை களைய, இந்தக் கமிட்டியின் அனைத்து சாதகமான பரிந்துரைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கிராமப்புற அஞ்சல் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும்.

கிளை அஞ்சல் நிலையங்களுக்கு மடிக்கணினி, பிரிண்டர், அதிவேக இணைய சேவை உள்ளிட்ட வசதிகள் வழங்க வேண்டும் என்று இதை ஏற்று நடத்துவோர் வலியுறுத்தி வருகின்றனர்.

பள்ளித்தென்னல் கிராமத்தில் பணியாற்றிய உதவி அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்று விட்டார். அவருக்குப் பதிலாக பணியாற்றும் நபர், வடமங்கலம், பூஞ்சோலைக்குப்பம், எம்.என்.குப்பம், நவமால்காப்பேர், பங்கூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வரும் அஞ்சல்களை அளித்து வருகிறார். இங்கு கிராம அஞ்சல் அலுவலர் நியமிக்கப்படவில்லை.

இந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு மத்தியில், தாங்கள் குறிப்பிடும் இடநெருக்கடியும் இந்த கிராமத்தில் உள்ளது. இதில், கூடுதல் உத்தரவுகளைப் பிறப்பித்து, நடைமுறைப்படுத்தும் நிர்வாகரீதியான தகுதி புதுச்சேரி அஞ்சல் கோட்ட தலைமையகத்துக்கு உள்ளது என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து இதுபற்றி புதுச்சேரி அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர் விநோத்குமாரிடம் கேட்டபோது, “பள்ளித் தென்னல் கிராமத்தில் உள்ள கிராம அஞ்சல் நிலையத்தை அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்ய உள்ளாட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இம்மாத இறுதிக்குள் இந்த இடமாற்றம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x