Published : 09 Jan 2024 05:01 PM
Last Updated : 09 Jan 2024 05:01 PM

பாலமேடு ஜல்லிக்கட்டில் 5-வது ஆண்டாக சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு பரிசு: அசத்தும் அலங்காநல்லூர் இளைஞர்

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாட்டை பரிசாக வழங்கிய பொன்குமார். | கோப்பு படம்

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியாளர் தொடர்ந்து 5-வது ஆண்டாக நாட்டுப் பசுவுடன் கன்றையும் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியும், நாட்டு மாடுகள் இனப்பெருக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. நாட்டு மாடுகளைப் பாதுகாக்கவே இதுபோன்ற வீர விளையாட்டுகள் பல ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதனாலே, ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை ஏற்பட்டபோது அலங்காநல்லூர் வாடிவாசலில் இருந்துதான் முதல் எதிர்ப்புக் குரல் ஒலித்தது. அங்கிருந்து தொடங்கிய போராட்டம் கன்னியாகுமரி முதல் சென்னை மெரீனா வரை வரலாறு காணாத போராட்டமாக மாறியது. நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு பெரும் ஆதரவு தெரிவித்தனர்.

அந்தப் போராட்டத்தால் தற்போது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடையின்றி நடக்கின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பொன்குமார், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடு பரிசளித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கி 2021, 2022, 2023-ம்ஆண்டுகளில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடு வழங்கியுள்ளார்.

தற்போது 5-வது ஆண்டாக பாலமேடு ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு சிறந்த காளைக்கு நாட்டு பசு மாட்டை கன்றுடன் வழங்க உள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கார், பைக், வாஷிங் மிஷின் உட்பட பெரிய வணிகப் பரிசுகளை தவிர்த்து நாட்டு மாடுகளை பரிசாக வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரிடம் பொன்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து பொன்குமார் கூறியதாவது: சிறந்த காளைக்கு நாட்டுப் பசு மாடு, கன்றுடன் வழங்க அனுமதி அளித்த பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து குழு நிர்வாகத்துக்கு நன்றி. இந்த பசு மாடு ஏ2 வகை பால் தரும் காங்கயம் நாட்டினத்தைச் சேர்ந்தது. ஜல்லிக்கட்டுப் போட்டி நமது பாரம்பரியம், வீரம் மட்டுமில்லாது நாட்டு மாடுகளுடைய முக்கியத்துவத்தை உணர்த்தவே நடத்தப்படுகிறது.

அந்த அடிப்படையில் நாட்டின காளைகளை மட்டுமே ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது. அடுத்தகட்டமாக வாணிபப் பரிசுகளைத் தவிர்க்கும் கோரிக்கையும் ஒரு நாள் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x