Published : 07 Jan 2024 09:20 AM
Last Updated : 07 Jan 2024 09:20 AM

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் நடைமேடை ஒதுக்கீடு: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தனியார் பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நடைமேடை. | படங்கள் - எம்.முத்துகணேஷ்

வண்டலூர்: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகள் நிறுத்த வசதியாக 1 முதல் 14 நடைமேடைகள் உள்ளன. இதில் 1 முதல் 7 நடைமேடை வரை அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் 8 முதல் 11 வரையுள்ள நடைமேடைகள் விழுப்புரம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.12 முதல் 14 வரை ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு போக்குவரத்து கழக பேருந்து சார்பில் 8, 9 நடைமேடைகள், விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, கடலூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் 10, 11 நடைமேடைகளில் இருந்து, செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், திடீரென 10, 11 நடைமேடைகள் ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடும் இடப்பற்றாக்குறை ஏற்படும்: 10, 11 நடைமேடைகளில் இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது 8, 9 நடைமேடைகளில் இருந்து இயக்கப் படுகின்றன. இதனால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 8, 9 நடைமேடைகளில், விழுப்புரம் மார்க்கத்தில் ஏற்கெனவே, 330 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்துடன், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும், 259 பேருந்துகளையும் சேர்த்தால், அங்கு கடுமையான இடப்பற்றாக்குறை ஏற்படும்.

திருவண்ணாமலை மார்க்கத்தில் இயல்பு நாட்களில் மட்டும்தான், 259 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விடுமுறை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில், கூடுதலாக, 300 பேருந்துகள் வரை இயக்கப்படும். இதனால், ஏற்கெனவே தெரிவித்தபடி, 10, 11 நடைமேடைகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ-விடம் மீண்டும் அதே 10, 11 நடைமேடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே 10, 11 நடைமேடைகளில் ஏற்கெனவே வைக்கப்பட்ட அறிவுப்பு பலகை அகற்றப்பட்டு விட்டது. அங்கு ஆம்னி பேருந்து நடைமேடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: ஏற்கெனவே பேருந்து நிலையம் அவசரகதியில் திறக்கப்பட்டது. பொது மக்களின் பல்வேறு தேவைகள் இங்கு இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. கூடுதல் இருக்கை வசதி, தண்ணீர் குடிக்கடம்லர், அம்மா உணவகம், அரசு மருத்துவமனை போன்ற வசதிகள் இங்கு இல்லை. அரசு போக்குவரத்துக் கழகத்துக்குஒதுக்கீடு செய்யப்பட்ட நடைமேடையை ஆம்னி பேருந்துக்கு ஒதுக்கியது கடும் கண்டனத்துக்குரியது. வருவாய் நோக்கத்துக்காகவே சிஎம்டிஏ செயல்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு, அரசு பேருந்து ஒன்றுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் ஆம்னி பேருந்துகளுக்கு தலா ரூ.150 வசூலிக்கப் படுகிறது. ஆம்னி பேருந்துகள் அதிகளவில் நிறுத்தப்பட்டால் வருவாய் கிடைக்கும் என்பதற்காக சிஎம்டிஏ நிர்வாகம் இந்த செயலை மேற்கொண்டுள்ளது. சேவை நோக்கத்துக்காகவே அரசு செயல்பட வேண்டும். வருவாய் நோக்கத்துக்காக செயல்படக் கூடாது. எனவே மீண்டும் அரசு போக்குவரத்து கழகத்துக்கு நடைமேடையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x