Published : 31 Dec 2023 04:04 AM
Last Updated : 31 Dec 2023 04:04 AM
சென்னை: இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பிரதமர் மோடி துணை நிற்கிறார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், இந்திய வம்சாவளி தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையிலும் நினைவு அஞ்சல் தலை வெளியீடு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், இலங்கை தூதரக அதிகாரி பிரியங்கா விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நினைவு அஞ்சல் தலையை வெளியிட, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, இலங்கை தமிழர்களின் வாழ்வியல் தொடர்பான குறும் படம் திரையிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து நட்டா பேசியதாவது: நம் மூதாதையர்கள் பட்ட துன்பத்தை இந்த படக்காட்சிகள் காட்டியது மிகக் குறைவுதான். அந்த துயரத்தின் ஆழத்தை நான் உணர்கிறேன். தன் வாழ்வுரிமைக்காக நம் இந்திய வம்சாவளியினர் செய்த தியாகங்களை பெருமைப்படுத்தும் வகையில், அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்ற இந்திய வம்சாவளி தமிழர்களை நினைவு கூர்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆங்கிலேயர்கள், இலங்கையில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கிய பிறகு, தமிழர்களை அங்கு குடியேற ஊக்குவித்தனர். தங்களது தேயிலை தோட்டங்களிலும், வயல்களிலும் தமிழர்களை வேலைசெய்ய பணித்தனர். அந்த தமிழர்களின் போராட்டம் மிகவும் வேதனையானது. இலங்கைக்கு இடம்பெயர்வதால் ஏற்படும் அபாயங்களை அந்த மக்கள் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. இலங்கையில் வாழும் நம் வம்சாவளியை இந்தியா மறக்கவில்லை. அவர்களுக்கு பிரதமர் மோடி துணையாக நிற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டைமான், இந்திய நட்புறவையும், இந்தியாவுடனான நீண்டகால தொடர்பையும் பற்றி பேசினார். பாஜக மாநில துணை தலைவர்கள் சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, பாரதிய பிரவாசி திவஸ் விருதாளர் நடேசன் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT