Published : 31 Dec 2023 04:06 AM
Last Updated : 31 Dec 2023 04:06 AM
கோவை: கோவை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நாட்டின் முக்கிய ரயில் நிலையமான கோவை ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையொட்டி, கடந்த 27-ம் தேதி கோவை- பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ரயில் சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, கோவை ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் பயணிகளுடன் தயாராக இருந்த வந்தே பாரத் ரயில், பெங்களூரு புறப்பட்டுச் சென்றது.
கோவையில் நடைபெற்ற விழாவில், பி.ஆர்.நடராஜன் எம்.பி., எம்எல்ஏ-க்கள் வானதி சீனிவாசன், அம்மன் கே. அர்ச்சுனன், துணை மேயர் வெற்றிச் செல்வன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவையில் நேற்று பிற்பகல் 12.10 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு திருப்பூர், ஈரோடு,சேலம், தருமபுரி, ஓசூர் ரயில் நிலையங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த ரயில் ஜன. 1-ம் தேதி ( நாளை ) முதல் பெங்களூருக்கு தினமும் காலை 5 மணிக்குப் புறப்பட்டு, காலை 11.30 மணியளவில் பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு கோவைக்கு இரவு 8 மணிக்கு வந்து சேரும். திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயிலில் சாதாரண இருக்கை வசதி, சிறப்பு இருக்கை வசதி என 2 வகையான பெட்டிகள் உள்ளன.
சாதாரண இருக்கை வசதிக்கு ரூ.940, சிறப்பு இருக்கை வசதிக்கு ரூ.1,860 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், காபி, தின்பண்டங்கள், காலை உணவு இலவசமாக வழங்கப்படும். ஆறரை மணி நேர பயணம்: கோவை - பெங்களூரு இடையேயான 380 கி.மீ. தொலைவை ஆறரை மணி நேரத்தில் இந்த ரயில் சென்றடையும். கோவையை சேர்ந்த தொழில் துறையினருக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT