Published : 29 Dec 2023 04:08 AM
Last Updated : 29 Dec 2023 04:08 AM

செல்வநிலை ஏற்றத்தாழ்வுகளை அரசு நலத்திட்டங்களால் குறைக்க முடியும்: பழனிவேல் தியாகராஜன்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய 48-வது அகில இந்திய அளவிலான சமூகவியல் மூன்று நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அருகில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், இந்தியச் சமூகவியல் சங்கத்தின் தலைவர் ஆபா சவுகான், செயலாளர் மணீஷ் வர்மா, விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோர். படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்: செல்வ நிலை ஏற்றத்தாழ்வுகளை அரசு நலத் திட்டங்களால் மட்டுமே குறைக்க முடியும் என்று தமிழகத் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் 48-வது அகில இந்திய அளவிலான சமூகவியல் மூன்று நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்தியச் சமூகவியல் சங்கம், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாநாட்டுக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். ‘21-ஆம் நூற்றாண்டின் நெருக்கடிகள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் தமிழகத் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசும்போது, ‘‘அதிக துருவ முனைப்பு மற்றும் அரசியலின் சீரழிவு போன்றவை மிகை உலக மயமாக்கலின் சில விளைவு களாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய சீரழிவு, பிளவு அரசியலைச் சார்ந்து இருக்கும் சில அரசியல் கட்சிகளுக்குத் தேர்தலில் வெற்றி பெற உதவியிருக்கலாம்.

உக்ரைன் மற்றும் காசா போன்ற ஆயுத மோதலில் தொலைந்து கொண்டிருக்கும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதில் ஐ.நா போன்ற பெரிய நிறுவனங்கள் சிதைவதற்கு அரசியல் வாதிகளால் வழிவகுத்துள்ளது. புவி வெப்ப மயமாதல், காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் சமத்துவ மின்மை மற்றும் துருவ முனைப்பு போன்ற சவால்களுக்குச் சமத்துவமான சமுதாயத்தை உறுதி செய்வதற்குச் சமூக வியலாளர்கள் தீர்வு காண வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக நாம் மிகை உலகமயமாக்கலின் கீழ் வாழ்ந்து வருகிறோம். இது பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களை ஒருங்கிணைத்து நுகர்வோருக்குப் பொதுவான உலகளாவிய சந்தையை உருவாக்க உதவியது. சீனா போன்ற நாடுகளில் மிகையான செல்வத்தை உருவாக்க உதவியது.

இருப்பினும், அதிக உலகமயமாக்கல் ஒரு நாட்டில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே செல்வத்தின் தீவிர ஏற்றத் தாழ்வுக்கு வழிவகுத்தது. இத்தகைய ஏற்றத்தாழ்வை அரசாங்க நலத்திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளால் மட்டுமே குறைக்க முடியும்’’ என்றார்.

முன்னதாக, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘இந்தியா உலகளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், தனிநபர் வருமானத்தில் உலகளவில் 139-வது இடத்தில் இருக்கிறோம். 1991-ம் ஆண்டு காலத்தில் இந்தியா, சீனா இடையிலான சராசரி தனிநபர் வருமானம் அளவு வெறும் 20 டாலர் அளவே இடைவெளி மட்டுமே இருந்தது. அதாவது இந்தியாவில் 224 டாலராகவும், சீனாவில் 244 டாலராகவும் இருந்தது.

இப்போது, இந்தியாவின் சராசரி தனி நபர் வருமானம் 2,600 டாலராகவும், சீனாவில் 12,600 ஆகவும் உள்ளது. இந்தளவு இருக்கும் வேறுபாட்டைக் களையச் சமூகவியலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூற வேண்டும். இந்தியாவில் இருக்கும் 121 மொழிகள், 25 ஆயிரம் ஜாதிகளைக் கடந்து நாம் உலகை வெல்ல வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் நகரங் களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறார்கள். நாம் விவசாய நிலங்களை இழந்து வருகிறோம்.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான வழிமுறைகளை அரசு உரு வாக்க வேண்டும். விவசாய நிலங்களை இழக்கக்கூடாது. சமத்துவ மின்மையில் இந்தியா மோசமான நாடாக உள்ளது. நாட்டில் 10 சதவீதம் பெரும் பணக் காரர்களிடம் 80 சதவீதம் சொத்துக்களும், 50 சதவீதம் சாதாரண நபர்களிடம் வெறும் 6 சதவீதம் சொத்துக்களும் உள்ளன. அதே நேரம், ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்களில் 50 சதவீதம் பேர் செலுத்தும் வரி 64 சத வீதமாகவும், 10 சதவீதம் பெரும் பணக்காரர்கள் செலுத்தும் வரி வெறும் 4 சதவீதமாக உள்ளது. இந்த நிலை மாற நாம் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

மாநாட்டில், இந்தியச் சமூக வியல் சங்கத்தின் தலைவர் ஆபா சவுகான், செயலாளர் மணீஷ் வர்மா, விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணைத் துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 900-க்கும் அதிகமானவர்கள் பங் கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில், ஹைதரா பாத் பல்கலைக்கழகச் சமூகவியல் துறை முன்னாள் பேராசிரியர் சந்திரசேகர் பட், டெல்லி சமூகவியல் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் விர்ஜினிஸ் காகா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x