Published : 27 Dec 2023 11:22 AM
Last Updated : 27 Dec 2023 11:22 AM

நெல்லையில் 3,700 ஹெக்டேரில் நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கெடுப்பு

படங்கள்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 3,700 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக வேளாண்மைத் துறை கணக் கிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாண்டு பிசான பருவத்தில் மட்டும் 27,891 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்திலுள்ள அணைகளில் இருந்து இப்பருவத்துக்கு கடந்த சில வாரங்களுக்குமுன் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தாமிரபரணி பாசன பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் நம்பிக்கையுடன் இறங்கியிருந்தனர்.

மாவட்டத்தில் அம்பா சமுத்திரம், சேரன்மகாதேவி, முக்கூடல், பாளையங்கோட்டை வட்டாரங்களில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். நாற்று நட்டு பயிர்கள் 25 நாட்களை கடந்திருந்திருந்த நிலையில்தான் மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதி கனமழை கொட்டியது. இந்த மழையில் குளங்கள், கால்வாய்களில் உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்ததில் நெற்பயிர்கள் மூழ்கின.

பாளையங்கோட்டை சீவலப்பேரி பகுதிகளில் நெற்பயிர்கள் பயிரிட்டிருந்த நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதுடன் மணல் அரிப்பு ஏற்பட்டுள்து. பல இடங்களில் தண்ணீரால் மணல் அடித்துவரப்பட்டு விளைநிலங்களை மூடிவிட்டன. தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் விளை நிலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. பல இடங்களில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகிவிட்டன. அதி கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதும், விளை நிலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மண்வளம் குறைந்துள்ளதும் விவசாயிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

விளை நிலங்களில் மண் அரிப்பு மற்றும் மணல் திட்டுகள் உருவாகியிருக்கின்றன.

சேதமடைந்த பயிர்கள் மண்ணோடு மண்ணாக மட்கிவிடும் நிலையில் விளை நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு தயார்படுத்துவது என்பது விவசாயிகளுக்கு சவாலானதாக மாறியிருக்கிறது. விளைநிலங்களை மீண்டும் பயிர்களை விளைவிக்க தயார்படுத்த, குளங்களில் இருந்து கரம்பை மணலை அள்ளிக் கொண்டுவந்து போடவேண்டும். ஏற்கெனவே பயிர் சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இது பெரும் சுமையாக மாறியிருக்கிறது.

இதனிடையே பயிர்கள் சேதம் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளும், அலுவலர்களும் கடந்த 1 வாரமாக கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அளிக்க தயாராகி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் முருகானந்தம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 3,700 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதுபோல் 300 ஹெக்டேரில் மக்காச்சோள பயிர்களும், 5,700 ஹெக்டேரில் உளுந்தும் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் 25 நாட்கள் ஆன நெற்பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. அம்பாசமுத்திரம், முக்கூடல், சேரன் மகாதேவி, பாளையங்கோட்டை வட்டாரங்களில் சேதம் அதிகம். பயிர் சேதங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

மழையால் 33 சதவீதம் மற்றும் அதற்குமேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.22,500 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நெல் சாகுபடி செய்த விவசாயிகளை கணக்கெடுத்து, அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் அரசு அறிவித்துள்ள இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக மருதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலாயுதம் கூறும்போது, “சாகுபடிக்காக நிலத்தை உழுது தயார்படுத்தியது, விதை நெல், உரங்கள், ஆட்கள் கூலி என்று பல ஆயிரங்களை செலவழித்துள்ளோம். எனவே ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விளை நிலங்களில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை சீர்செய்யும் வகையில் குளங்களில் இருந்து கரம்பை மணலை அள்ளி கொண்டு வர பொதுப் பணித் துறையிடம் அனுமதி கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இந்த சிரமங்களை போக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x