Published : 27 Dec 2023 05:12 AM
Last Updated : 27 Dec 2023 05:12 AM
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது பிறந்தநாள் விழா கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக சார்பில் ஆர்.ராசா எம்.பி. உள்ளிட்டோர் நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.
இதற்கிடையே முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர் நல்லகண்ணுவின் 99-வது பிறந்த நாளில், அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்த வேண்டும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சமூக சீர்திருத்தவாதி. நீண்ட காலம் அவர் மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.
இதேபோல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.கே.சசிகலா உள்ளிட்டோர் பிறந்நாள் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT