Last Updated : 25 Dec, 2023 02:10 PM

 

Published : 25 Dec 2023 02:10 PM
Last Updated : 25 Dec 2023 02:10 PM

மூத்த குடிமக்களின் புகாருக்கு வீடு தேடி சென்று தீர்வு - சென்னை காவல் ஆணையர் அணுகுமுறைக்கு வரவேற்பு

சென்னை: மூத்த குடிமக்கள் புகார் அளித்த அன்றே, அவர்களின் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகளை அனுப்பி, பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் சென்னை காவல் ஆணையரின் அணுகுமுறை வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட அனைத்து வகையான குற்றச்செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

மேலும், பொது மக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும், மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவுறுத்தி உள்ளார். இதை நடைமுறைப்படுத்தும் வகையில், புதன்கிழமைதோறும் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்படும் மூத்தகுடிமக்களின் புகார் மனுக்களை காவல் ஆணையரே நேரில் பெற்றுக் கொள்கிறார். அதோடு நின்றுவிடாமல், புகார் அளிக்கும் மூத்த குடிமக்களின் காவல் எல்லைக்குட்பட்ட காவல் துணை ஆணையரை, புகார் அளித்தவர்களின் வீட்டுக்கே அனுப்பி பிரச்சினைகளின் முழு விபரத்தையும் கேட்டு உடனடி தீர்வு காண செய்கிறார்.

இதில் போலீஸாரால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கும் கூட உரிய சட்ட வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர். இது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘கடந்த நவம்பர் 1-ம் தேதி சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஆணையரிடம் புகார் அளித்தார். அதில், ‘வீட்டின் வாடகைதாரர் வாடகைதராமல் 8 மாதங்களாக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில் கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாள் சென்று வீட்டை மீட்டு முதியவரிடம் ஒப்படைத்தார். இதேபோல், வளசரவாக்கத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை தனது மகள், மருமகன் ஏமாற்றி பெற்றுக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஆரோக்கியத்தை முதியவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து ஆணையர் தீர்வு கண்டார். அதுமட்டுமல்லாமல் மடிப்பாக்கத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முதியவர் ஒருவர் தனது மருத்துவ செலவுக்காக நிலத்தை விற்க முயன்றபோது, நில ஆவணத்தை மகன் எடுத்து சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து பரங்கிமலை துணை ஆணையர் தீபக் சிவாச்சென்று இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டார். இதேபோல், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மூதாட்டி, தனது கணவர் இல்லாத நிலையில் மும்பை சென்ற மகனை மீட்டு வயதான தன்னை நல்ல முறையில் கவனித்து கொள்ளுமாறு அறிவுரை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையடுத்து, திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், சம்பந்தப்பட்ட மூதாட்டி வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறி மகனை மும்பை போலீஸார் உதவியுடன் தேடி வருவதாக தெரிவித்தார். அசோக் நகரைச் சேர்ந்த முதியவர் தங்களின் குடியிருப்புக்கு தடையாக உள்ள அண்டைவீட்டின் மரத்தை நடவடிக்கை கோரியிருந்தார். இந்த விவகாரத்தில் அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் சென்று பிரச்சினையை தீர்த்து வைத்தார். இப்படி பெரிய, சிறிய என பிரச்சினைகளை வகைப்படுத்தாமல் மூத்த குடிமக்களின் அனைத்து பிரச்சினை களையும் காவல் ஆணையர் தீர்த்து வருகிறார்.

இதுகுறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் கேட்டபோது, "மூத்த குடிமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கும்போது காது கொடுத்து கேட்க வேண்டும். காவல்துறை ஒருபடி மேலே சென்று அவர்களின் புகாருக்கு, இ-மெயில் புகார் அளித்தால் கூட முன்னுரிமை கொடுத்து, பிரச்சினையை தீர்த்து வைக்கிறோம். இது மன நிறைவை தருகிறது. அனைத்துதரப்பு மக்களுக்கும் உதவுவதே காவல்துறையின் நோக்கம்" என்றார். முதியோர் விவகாரத்தில் நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ள இந்த அணுகுமுறை தொடர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x