Published : 25 Dec 2023 01:56 PM
Last Updated : 25 Dec 2023 01:56 PM

ஓ.எம்.ஆரில் ஓடிய வெள்ளத்தால் மூழ்கிய தையூர் தரைப்பாலம் உயர்மட்ட பாலமாகுமா?

தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம். | கோப்புப் படம்

தையூர்: கேளம்பாக்கம் அருகே தையூரில் பழைய மகாபலிபுரம் சாலை (ஒ.எம்.ஆர்) மழைக்காலத்தில் வெள்ளம் வரும் போது, தரைப்பாலத்தில் போதிய தண்ணீர் செல்ல வழியில்லாததால், சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புதிதாக அமைக்கப்பட்டு வரும் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்வதற்காக, ஓ.எம்.ஆரில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்தால் தரைப்பாலத்தின் மீது 4 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். சமீபத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் தையூரில், 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் தடுப்பு சுவரை தாண்டி வெள்ளம் பாய்ந்து சென்றது.

இதனால் பல இடங்களில் சாலை சேதமடைந்தது. அந்த நேரம் ஒ.எம்.ஆரில் 4 நாட்கள் போக்குவரத்து துண்டிக்கபட்டது. மழை வெள்ள நீரில் ஒருவர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அதேபோல் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், வீட்டு மனைப்பிரிவுகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் செங்கண்மால் கிராமத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தள பகுதி வீடுகள் முழுவதுமாக மழைநீர் சூழ்ந்து தனி தீவாகமாறியது. பொதுமக்கள் மிக்ஜாம் புயலை மறக்க முடியாத அளவுக்கு கடும் துன்பத்துக்கு ஆளாகினர். இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண தையூர் பகுதியில் செங்கண்மால் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு எதிரே சிமென்ட் குழாய்கள் பொருத்தப்பட்ட தரைப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் திட்டத்தின் கீழ், 43.43 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலத்தில், புதிய கான்கிரீட் தரைப்பாலம், ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமையும் இந்த தரைப்பாலம் சாலை மட்டத்தைவிட தாழ்வாக அமைக்கப்பட்டு வருகிறது. ஓ.எம்.ஆர் சாலையின் குறுக்கே அமையும் இந்த தரைப்பாலத்தின் ஒரு பாதி பணிகள் முடிந்த நிலையில், மறு பாதையில் பணிகள் நடக்க உள்ளன. மிக்ஜாம் புயலுக்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது இந்த தரைப்பாலம் பயனற்று போனது. இந்த தரைப்பாலத்தை, மேம்பாலமாக உயர்த்த, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெடுஞ்சாலை துறையினர் முறையாக ஆய்வு செய்யாமலும், சம்பந்தப்பட்ட பகுதி மக்கள், உள்ளாட்சி பிரதிநிகளிடம் கருத்து கேட்காமலும் தரைப்பாலத்தை மிகவும் குறுகலாக அமைத்துள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்போரூர் எம்எல்ஏவிடமும் இதுகுறித்து முறையிட்டு இருப்பதாகவும் மழை நேரத்தில் அவரும் வந்து பாதிப்புகளை பார்வையிட்டார். நெடுஞ்சாலை துறையினரிடம் எம்எல்ஏ விளக்கம் கேட்டபோது நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக பதில் அளிக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எஸ்.குமரவேல்

தையூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.குமரவேல் கூறியது: ஒவ்வொரு மழையின் போதும் தையூர் ஏரி உபரி நீரால் ஒ.எம். ஆர். சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. தண்ணீர் செல்ல போதிய வசதி இல்லாததால் இப்பகுதியில் குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனால் ஒ.எம்.ஆர் பி.எஸ்.பி.பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் தற்போது மழைநீர் செல்வதற்கு தரைமட்ட பாலம் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது.

மிக்ஜாம் புயல் மற்றும்கனமழையால் அந்த பாலத்தின் மீது, 5 அடிக்கும் மேலே வெள்ளநீர் சென்றது. இதனால் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அதில் சிலர் கயிறு மூலம் மீட்கப்பட்டனர். அதில் அன்பு என்பவர் இறந்து விட்டார். மேலும், பல வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதோடு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் சிங்கப்பூர் கம்பெனி அருகில் உள்ள தரைப்பாலத்தை உயர்த்தி மேல்மட்ட பாலமாக அமைக்கப்பட வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x