Published : 23 Dec 2023 09:55 PM
Last Updated : 23 Dec 2023 09:55 PM

“உலகத் தரத்துக்கு ஒப்பானது” - விமர்சனங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னை: “வானிலை ஆய்வு மையம் உலகத் தரத்துக்கு ஒப்பானது. வர்தா, கஜா, நிவர்‌, மாண்டோஸ்‌ மற்றும்‌ மிக்ஜாம்‌ புயல்கள்‌ குறித்து வானிலை மையத்தின்‌ எச்சரிக்கைகள்‌ காரணமாக பெருமளவு உயிர்‌ சேதம்‌ தவிர்க்கப்பட்டது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக் குறிப்பு: சமீபமாக, சென்னை வானிலை மையம்‌ நவீனமாக இல்லாமல்‌ இருப்பதாக தவறான விமர்சனங்கள்‌ ஊடகங்களில்‌ வெளியாகி வருகிறது. இந்திய வானிலை துறையில்‌ பயன்பாட்டில்‌ இருக்கும்‌ அதிவேக கணினிகள்‌, இஸ்ரோவின்‌ செயற்கைகோள்‌ வசதிகள்‌, ரேடார்கள்‌ மற்றும்‌ தானியங்கி வானிலை சேகரிப்பன்கள்‌ உலகத்தரத்திற்கு ஒப்பானவை. சென்னை மண்டல வானிலை மையத்திலும்‌ இத்தகைய கருவிகளே பயன்பாட்டில்‌ உள்ளன.

குறிப்பாக, சென்னை வானிலையை கண்காணிக்க இரண்டு டாப்ளர்‌ ரேடார்களும்‌, தென்‌ தமிழகத்தை கண்காணிக்க மூன்று டாப்ளர்‌ ரேடார்களும்‌ பயன்பாட்டில்‌ உள்ளன. இதில்‌ X Band ‌ வகை ரேடார்‌ இஸ்ரோ தொழில்‌ நுட்பத்துடன்‌ தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும்‌. இந்‌தியாவில்‌ சிறந்த ரேடார்‌ தொழில்நுட்ப வல்லுநர்கள்‌ சென்னை வானிலை மையத்தில்‌ பணியாற்றுகிறார்கள்‌. உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வு துறையின்‌ கட்டமைப்பு மற்றும்‌ முன்னெச்செரிக்கைகளை உலக தரம்‌ வாய்ந்தது என்று பாராட்டியுள்ளது. வர்தா, கஜா, நிவர்‌, மாண்டோஸ்‌ மற்றும்‌ மிக்ஜாம்‌ புயல்கள்‌ குறித்து வானிலை மையத்தின்‌ எச்சரிக்கைகள்‌ காரணமாக பெருமளவு உயிர்‌ சேதம்‌ தவிர்க்கப்பட்டது

இந்நிலையில்‌, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக, சென்னைவானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும்‌ விமர்சனங்கள்‌, அர்ப்பணிப்புடன்‌ இயங்கும்‌ தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும்‌ விதமாகவும்‌, நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும்‌ விதமாகவும்‌ உள்ளது. அத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு அன்புடன்‌ கேட்டுக்கொள்ளப்படுறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x