Published : 23 Dec 2023 08:14 AM
Last Updated : 23 Dec 2023 08:14 AM

அவசர சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் கால்நடைகள்: சிறப்பு மருத்துவர் குழுவை அமைக்குமா ஈரோடு மாவட்ட நிர்வாகம்?

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை (கோப்பு படம்)

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் மற்றும் சினைக்காலங்களில் அவசர மருத்துவ உதவி கிடைக்காததால் கால்நடைகள் உயிரிழந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஈரோடு மாவட்டத்தின் இரு கண்களாக ஜவுளித்தொழிலும், விவசாயமும் உள்ளன. விவசாயிகளின் வாழ்வோடு கலந்த கால்நடை வளர்ப்பும், ஈரோட்டின் பிரதான தொழிலாக உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம், புன்செய் புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் மாட்டுச்சந்தையில் குவியும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மற்றும் ஈரோடு ஆவினுக்கு வரும் பால் அளவு போன்றவை கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் 3.50 லட்சத்திற்கு மேல் பசு மற்றும் எருமைகள் உள்ளன. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் பசுமாடு மற்றும் எருமைகளில் இருந்து பெறும் பாலை, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் ஆவினுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதோடு, தனியார் பால் நிறுவனங்களும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பாலை கொள்முதல் செய்து வருகின்றன. இவ்வாறு பால் வழங்கும் பசு, எருமைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் மற்றும் சினைக்காலம் போன்றவற்றின் போது மருத்துவர்களின் உடனடி உதவி விவசாயிகளுக்குத் தேவைப்படுகிறது.

சிகிச்சை பெறுவதில் இடையூறு: விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யும் தனியார் பால் உற்பத்தியாளர்கள் சிலர், கால்நடைகளுக்கு மருத்துவ சேவை வழங்குகின்றனர். அதேபோல், ஆவின் நிர்வாகமும் கால்நடை மருத்துவர்களை நியமித்து மருத்துவ சேவை அளித்து வருகிறது. கால்நடை பராமரிப்புத் துறை சார்பிலும் , மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இரவு நேரங்களில் அவதி: ஆனால், சமீபகாலமாக கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதாகவும், இதனால், கால்நடைகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட உழவர் விவாதக்குழு செயலர் பா.மா.வெங்கடாசலபதி கூறியதாவது: கடந்த காலங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம், விவசாயிகள் தகவல் தெரிவித்தால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வருகை தந்தனர். ஆனால், தற்போது அந்த நடைமுறை பயன்பாட்டில் இல்லை. கால்நடைகளுக்கு நோய், சினை பார்த்தல், ஊசிபோடுதல், நஞ்சு எடுத்தல் போன்றவற்றுக்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையத்துக்கோ அல்லது தனியார் மருத்துவர்களிடம் சென்றோ சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் கால்நடைகள் நோய்களால் பாதிக்கப்படும்போது, மருத்துவ உதவி கிடைக்காமல், உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கன்று பிறப்பதற்கு முன் பனிக்குடம் உடைந்து மூன்று மணி நேரத்துக்குள் கன்று பிறக்க வேண்டும். இல்லையெனில், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, கன்றுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக கன்று பிறக்கவில்லையெனில், மருத்துவர் மூலம் எடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பாதிப்பு ஏற்பட்டு கன்று இறந்துவிடும். இதனால் பெரும் பாதிப்பும், பொருளாதார இழப்பும் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. உதாரணமாக, கவுந்தப்பாடி அருகேயுள்ள பாப்பாங்காட்டூரில் பசு,எருமை மாடுகள் இரண்டும் பனிக்குடம் உடைந்து கன்று பிறக்காத நிலை ஏற்பட்டது. பல மருத்துவர்களை தொடர்பு கொண்டும் மருத்துவ சேவை பெற முடியவில்லை. மறுநாள் வயிற்றிலேயே இறந்த கன்றுகள் எடுக்கப்பட்டன.

மருத்துவ தொடர்பு எண் தேவை: கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும்போது, ஆவின் மருத்துவர் அல்லது கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து சிகிச்சை அளிக்க வேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களிலும், பிரசவ காலங்களிலும் கால்நடைகளைக் காக்க ஒரு மருத்துவக் குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்து, அதன் தொடர்பு எண்ணை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொருளாளர் முனுசாமி கூறியதாவது: ஈரோடு ஆவினைப் பொறுத்தவரை சுழற்சி முறையில் மருத்துவர்களை அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் வரும் தகவல் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, விவசாயிகளைச் சென்றடைகிறது. இதர காலங்களில், கால்நடைபராமரிப்புத்துறை மையங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வருகிறோம். அவசர காலங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் குழுவும், ஆம்புலன்ஸ் வசதியும் செய்து தர வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கால்நடை ஆம்புலன்ஸ்: மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு, உடனடி சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் வசதி உள்ளது போல், கடந்த ஆட்சியில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அவை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதால், கால்நடைகளின் இறப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஈரோடு மாவட்டத்தில் 116 கால்நடை மருத்துவ மையங்கள் உள்ளன. அனைத்திலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தற்போது மாவட்ட அளவில் ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் உள்ளது. வட்டாரவாரியாக ஆம்புலன்ஸ் இயக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் வட்டார வாரியாக கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x