Published : 23 Dec 2023 08:00 AM
Last Updated : 23 Dec 2023 08:00 AM
விருதுநகர்: தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்துக்கும் நிவாரணம் அறிவிக்க வேண்டும், என விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த தொடர் கன மழையால், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், நிலக்கடலை போன்ற பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி அழிந்துவிட்டன. சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, மக்காச்சோளம், இரும்பு சோளம், கம்பு போன்ற பயிர்களும் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன.
மேலும், சாத்தூர் அருகே ஓ.கோவில்பட்டியில் மாரியம்மாள் என்பவரது வீடும், பாவாலியில் வெள்ளைச்சாமி என்பவரது வீடும் இடிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், சென்னையில் கன மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டைக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற வட்டாரங்களுக்கும், தென்காசிக்கும் குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. இதுபோன்று, விருதுநகர் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா கூறுகையில், கன மழையால் விருதுநகர் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஏன் அரசு பாராமுகமாக உள்ளது. பலர் தங்களது வீடுகளையும், கால்நடைகளையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும். மேலும், பயிர் சேதமும் அதிகமாக உள்ளது. தற்போது மாவட்ட நிர்வாகம் மூலம் பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதன்படி, நெல் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், மக்காச்சோளத்துக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், பயறு வகை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT