Published : 22 Dec 2023 09:23 PM
Last Updated : 22 Dec 2023 09:23 PM

கிடப்பில் போடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் சேதமடையும் பேட்டரி வாகனங்கள் @ ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கிடப்பில் உள்ளதால் பயன்பாடின்றி சேதமடைந்துள்ள பேட்டரி வாகனங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் டெண்டர் ரத்து செய்யப்பட்டதால் ரூ.5.5 கோடி மதிப்பிலான திடக்கழிவு மேலாண்மை திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால் வீடுகளில் குப்பை சேகரிப்பதற்காக வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பயன்பாடின்றி சேதமடைந்து வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகள் 4 சுகாதர மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நகர் நல அலுவலர், 4 சுகாதர ஆய்வாளர்கள், 6 மேற்பார்வையாளர்கள், 6 ஓட்டுநர்கள், 109 நிரந்தர தூய்மை பணியார்கள் என 130 பேர் சுகாதார பிரிவில் பணியாற்றி வந்தனர். நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தூய்மை பணிகள் முழுவதும் தனியார் வசம் ஒப்படைக்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் தூய்மை பணிகளை தனியார் வசம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தினசரி சேகரமாகும் 60 டன் குப்பையை தரம் பிரித்து வழங்குவதற்காக ரூ.5 கோடிக்கு கடந்த மே மாதம் டெண்டர் விடப்பட்டது. தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் நகர் நல அலுவலர் பணியிடம் நீக்கப்பட்டு, சுகாதர ஆய்வாளர் பணியிடம் 4 ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தூய்மை பணி ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் போதிய ஒப்பந்த பணியாளர்களை நியமிக்காததால் சுகாதர பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ஏற்கெனவே நகராட்சியில் தூய்மை பணி மேற்கொண்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு தற்காலிக ஏற்பாடாக 11 வார்டுகளில் தூய்மை பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பிற வார்டுகளில் நகராட்சி பணியாளர்களே குப்பை சேகரித்து வருகின்றனர். அவர்கள் குப்பையை முறையாக தரம் பிரிக்காமல் நீர்நிலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மை பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னமும் மறு ஒப்பந்தம் விடப்படவில்லை. இதனால் நகராட்சியில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டு, தெருக்கள் மற்றும் குடியிருப்புகளை சுற்றிலும் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடுகளில் குப்பை சேகரிப்பதற்காக வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் சேதம் அடைந்து வருகிறது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தூய்மைப் பணி ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் உரிய பணியாளர்களை நியமிக்காததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தற்போது 11 வார்டுகளுக்கான தூய்மை பணி தற்காலிகமாக தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மேலாண்மை திட்டத்தில் மறு ஒப்பந்தம் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 25 பேட்டரி வானங்கள் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x