Published : 31 Jan 2018 11:02 AM
Last Updated : 31 Jan 2018 11:02 AM

திருத்தணி முருகன் கோயிலில் முன்னேற்பாடுகள் செய்வதில் நிர்வாகம் அலட்சியம்: நெரிசலில் சிக்கி அவதியுறுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆடி, தை கிருத்திகை மற்றும் தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் விசேஷ நாட்களில் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆங்காங்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என இரண்டு வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு தரிசனத்துக்கு ரூ.100 முதல் 150 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக் கட்டணங்களை வசூலிக்கவும், பக்தர்களை வரிசைப்படுத்தவும் கோயில் நிர்வாகம் பணியாளர்களை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பக்தர்களை முறைப்படுத்துவதில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், மூலவர் சந்நிதியின் பிரதான வாயிலில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் சிலர் தெரிவித்ததாவது: பொது தரிசனம் தாமதமாகும் என்பதால் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனத்துக்குச் செல்கிறோம். ஆனால், வரிசையில் சிறிது தூரம் சென்ற உடனேயே பொது தரிசன வரிசையில் சேர்ந்துவிடுகிறது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்த பணியாளர்கள் இருப்பதில்லை.

பொது தரிசனத்தில் காலையில் நின்றால் மாலையில்தான் சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது. தைப்பூசமான இன்று அதிக அளவில்பக்தர்கள் வரக்கூடும். ஆகவே, கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

இதுகுறித்து, இந்துசமய அறநிலையத் துறை - திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் சிவாஜி கூறுகையில், ‘திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசேஷ நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x