Published : 18 Dec 2023 09:42 PM
Last Updated : 18 Dec 2023 09:42 PM
> வெள்ளத்தில் தத்தளிக்கும் நெல்லை - கள நிலவரம் என்ன?: அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகரம் திங்கள்கிழமை 2-வது நாளாக தத்தளித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப் பகுதிகளிலும், மாவட்டத்தின் பிற இடங்களிலும் திங்கள்கிழமையும் கனமழை நீடித்தது. பாளையங்கோட்டையில் சேவியர் காலனி, என்.ஜி.ஓ. காலனி, மனகாவலம்பிள்ளை நகர் பகுதிகள், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம், கைலாசபுரம், உடையார்பட்டி, வண்ணார்பேட்டை பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சீவலப்பேரி அருகேயுள்ள குப்பக்குறிச்சி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தாமிரபரணி மற்றும் சிற்றாறு வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளில் தத்தளித்தவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் ஆவின் நிர்வாகம் மூலம் 33 ஆயிரம் லிட்டர் பால் நாள்தோறும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கூடுதலாக 2 டேங்கர்கள் பால் மதுரையில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும், 2 டன் பால்பவுடரும் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
> தாமிரபரணி கரையோர மக்கள் பரிதவிப்பு: நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நிரம்பியிருப்பதை அடுத்து, அணைகளுக்கு வரும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் காட்டாற்று வெள்ளமாய் வந்து சேரும் தண்ணீர் என்று தாமிரபரணியில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
தாமிரபரணி வெள்ளப்பெருக்கால் திருநெல்வேலி சந்திப்பு பகுதி முழுக்க வெள்ளக்காடானது. மீனாட்சிபுரம், கைலாசபுரம் பகுதியிலுள்ள குடியிருப்புகளை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடியது. இந்த வீடுகளில் தவித்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தாமிரபரணியில் கரைபுரளும் வெள்ளம் திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள ஆற்றுப்பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டது. இந்த வெள்ளம் ஆற்றையொட்டியுள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள்ளும் புகுந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்வான பகுதியிலுள்ள பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள ஆவணங்கள் சேதமடைந்தன.
> நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளம்: தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (டிச.19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, மீட்பு பணிக்காக நெல்லை மாவட்ட மீனவ கிராமங்களில் இருந்து 30 நாட்டுப் படகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் வெள்ளம் புகுந்ததால் அலுவலர்களும், பணியாளர்களும் அங்கு பணிக்கு செல்ல முடியவில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் தற்போது செயல்பாட்டில் இல்லாததால் ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 9384056217, 9629939239 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் ரயில்கள் ரத்து: கங்கைகொண்டான்- தாழையூத்து இடையே ரயில் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாகியதாலும், பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாலும் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி- ஈரோடு ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தன. இதுபோல் திருநெல்வேலி- தூத்துக்குடி, திருநெல்வேலி- திருச்செந்தூர், திருநெல்வேலி- செங்கோட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டது.
> அதிகபட்ச மழை: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் ஞாயிறு காலை 8.30 மணி முதல் திங்கள்கிழமை காலை 6.30 மணிவரையிலான நேரத்தில் அதிகபட்சமாக 615 மி.மீ. மழை பதிவாகியிருந்து.
> ஜன.2 வரை கால நீட்டிப்பு: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த ஜன.2-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட் நீடிப்பு: “தென் மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழை பொழிந்துள்ளது. தென்காசியில் 60 சதவீதம், தூத்துக்குடியில் 80 சதவீதம் இயல்பைவிட கூடுதல் மழை பொழிந்துள்ளது. இது அதி கனமழையே தவிர மேக வெடிப்பு அல்ல என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் திங்கள்கிழமை கூறுகையில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் இரண்டு தினங்களைப் பொறுத்தவரையில் தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழைபெய்யக் கூடும். அடுத்த 24 மணி நேரத்துக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது. மேலும், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
செவ்வாய்க்கிழமை குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்” என எச்சரிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
“தென்மாவட்ட மக்களைக் காப்போம்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி: “இரண்டு நாட்களாக, தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகின்றது. அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டங்களில் குவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகள், அமைச்சர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சென்னையில் செயல்பட்டதைப்போல, அந்த அனுபவங்களைக் கொண்டு, இன்னும் சிறப்பாக செயல்பட்டு, தென் மாவட்ட மக்களை காப்போம் இது உறுதி” என்று கோவையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை துவக்கி வைத்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறியுள்ளார்.
இதனிடையே, தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தென்மாவட்டங்களுக்கு வாட்ஸ் அப் உதவி எண் அறிவிப்பு: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்கள், தங்களுக்குத் தேவையான உதவிகளைக் கோரும் வகையிலும், பாதிப்புகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் வகையிலும் ‘வாட்ஸ்அப்’ எண் மற்றும் ‘ட்விட்டர்’ (எக்ஸ்) கணக்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள். மீட்பு நடவடிக்கைகள் முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண் : 8148539914 மூலமாக தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, “நெல்லையைப் பொறுத்தவரை மழை நீர் சீக்கிரம் வடிந்துவிடும். ஆனால், தூத்துக்குடியில் மழை நீர் வடிய தாமதம் ஆகலாம். வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். கோவை மாவட்டம் சூலார் விமானப்படை நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்களை இயக்கி உணவு, நிவாரணப் பணிகளைத் திட்டமிட்டு வருகிறோம். வானிலை ஆய்வு மையம் மழை கணிப்புகள் அறிவிப்பின்படி மீட்பு நிவாரணப் பணிகள் செய்து வருகிறோம்” என்று தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
> ரயில் பயணிகள் தவிப்பு: தொடர் மழை காரணமாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 2 ரயில்கள் விருதுநகரில் இன்று நிறுத்தப்பட்டன. இதனால், குழந்தைகள், முதியவர்களுடன் பயணிகள் தவித்தனர்.
பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் கடிதம்: “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், செவ்வாய்க்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
> ராமநாதபுரம் நிலவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். சாயல்குடி பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், மல்லி, வெங்காயம், சிறுதானிய பயிர்கள் நீரில் மூழ்கின. 50 செம்மறி ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சாலை துண்டிக்கப்பட்டதால் 10 கிராம மக்கள் வீடுகளில் முடங்கினர்.
வேகமாக நிரம்பி வரும் தென்மாவட்ட அணைகள்: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு 138 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்துக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதன் நீர்மட்டம் வெகுவாய் அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. மேலும், நீர்மட்டம் 68.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளதால், அப்போது 2-ம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்படும் என்று நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.
விருதுநகரில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; பல கிராமங்கள் துண்டிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாறுகள், கண்மாய்கள் நிரம்பியதால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் பழநி, கொடைக்கானலில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. பழநியில் அணை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு நிலவரம் என்ன?: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை, ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது. பலமணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனி, டவுன் வ.உ.சி. தெரு,பாரதியார் தெருவில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். திருநெல்வேலி ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் கனமழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேறி அங்குள்ள திருமண மண்டபத்தில் தஞ்சமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தெருக்களில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் சென்றதால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கினர். கடைகள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரிலும் தெருக்கள், சாலைகள்வெள்ளக்காடாகின. ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, வல்லநாடு பகுதிகளில் பிசான சாகுபடிக்காக தயார் செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கின. தூத்துக்குடி மாநகர பகுதியில் அனைத்து சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் முடங்கின. நாகர்கோவில் மீனாட்சி கார்டன், வடசேரி புளியடி, பாரைக்கால் மடம் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் மக்களை மீட்டனர். தென்காசி மாவட்டத்திலும் மிதமான மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. கடனாநதி அணை முழுமையாக நிரம்பியது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
> களப்பணியில் 5,000 பேர் - திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சீரான மின்சாரம் வழங்க 3 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு 5,000 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
உதவி கோரும் மக்கள் பதிவுகள்: நெல்லையில் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தாமிபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
“மிக அவசியமின்றி வெளியே வராதீர்கள்” - ஆளுநர் ரவி: "தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும், மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத் துறைகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. விரைவில் நிலைமை சீரடைய பிரார்த்தனைகள்" என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
“தென்மாவட்ட நிவாரணப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துக”: “சென்னையில் ஏற்பட்டதுபோல் தென்மாவட்ட மக்களை பாதிக்கப்படவிடாமல் முன் அனுபவங்களைப் பயன்படுத்தி, சீர்குலைந்த சாலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு துரிதமாக செயல்படுத்த வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
காயல்பட்டினம் நிலவரம் | அன்புமணி எச்சரிக்கை: “காயல்பட்டினத்தில் இன்று நிகழ்ந்தது நாளை தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நிகழக்கூடும். இனியாவது புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திமுக மீது செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு: “மழைக்காலத்தில் மக்களை கவனிக்காமல் யாராவது கட்சி மாநாட்டை நடத்துவார்களா?” என்று திமுக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் நிரம்பிய 70% கண்மாய்கள்!: தொடர் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள 70 சதவீத கண்மாய்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துளளனர்.
மீட்புப் பணிகள் - தினகரன் வலியுறுத்தல்: தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு: தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அருவி பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்பட்டியில் வரலாறு காணாத மழை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து மிதமாகவும், மதியம் ஒரு மணிக்கு மேல் கனமழையும் பெய்தது.
கனமொழி எம்.பி அப்டேட்: தூத்துக்குடி: வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
புகைப்படத் தொகுப்புக்கு > வெள்ளத்தில் மிதக்கும் தென்மாவட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT