நெல்லையை மூழ்கடித்த வெள்ளம்... - உதவி கோரும் மக்கள் பதிவுகள்

நெல்லையை மூழ்கடித்த வெள்ளம்... - உதவி கோரும் மக்கள் பதிவுகள்
Updated on
2 min read

நெல்லை: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இன்றும் சில இடங்களில் மழை தொடர்கிறது. வெள்ளத்தின் பாதிப்புகளை மக்கள் எக்ஸ் தளத்தில் பாதிப்புகளாக வெளியிட்டுள்ளனர். அதீத கனமழையால், குறிப்பாக நெல்லை மாநகரம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லையில் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தாமிபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இதேபோல் ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் கடைகளை மூழ்கடித்துள்ளது வெள்ளம். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. ஸ்ரீவைகுண்டத்தி திருநெல்வேலி - தூத்துக்குடியை இணைக்கும் ரயில் பாதை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பழுதாகி உள்ளது.

நெல்லை விகே புரத்தில் தொடர் கனமழையால் மலைப்பாம்பு வீடு ஒன்றுக்குள் புகுந்தது. இதேபோல் பல இடங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் உதவிகள் கோரி வருகின்றனர்.

நெல்லை சிந்துபூந்துறை செல்வி நகர் மற்றும் உடையார்ப்பட்டி பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சில இடங்களில் மின்கோபுரங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து உதவிகள் கோரி இப்பகுதி மக்கள் எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பல வீடுகளில் பச்சிளம் குழந்தைகள் இருப்பதால் உடனடி உதவி தேவை என பதிவிட்டு வருகின்றனர். எந்த அவசர எண்களும் சரியாக செயல்படவில்லை என எக்ஸ் தள பயனாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நெல்லை அருகே கிராமம் ஒன்றில் இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட, வெள்ளநீரை கடந்தே அவர் ஆம்புலன்ஸுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

தொடர் கனமழையால் மணிமுத்தாறு அணை 100 அடியை எட்டியதை அடுத்து, அணை நீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையின் பெரிய மதகுகள் திறக்கும் காட்சியும், அதிலிருந்து நீர் வெளியேற்றுப்படும் காட்சியும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

நெல்லை களக்காடு பகுதியில் வெள்ளநீர் சூழ தவறவில்லை. களக்காடு காவல்நிலையம் அருகே வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் அடித்துச் செல்லப்பட்டார். எனினும் உடனடியாக அருகிலிருந்த இளைஞர்கள் அவரை மீட்டனர்.

நெல்லை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பேருந்து நிலையில் ஒரு பேருந்தை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. இதனால் பேருந்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியில் அமைந்துள்ள கருப்பாநதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து நீர் திறக்கப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணையில் இருந்து நீர் வெளியேறும் காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in