Last Updated : 08 Jan, 2018 09:53 AM

 

Published : 08 Jan 2018 09:53 AM
Last Updated : 08 Jan 2018 09:53 AM

மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகங்களை வகுக்க வேண்டும்: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் வியூகங்களை வகுக்க வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பலரும் பேசினா்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக நூலிழையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தவறவிட்டது. இது அக்கட்சியினரிடையே சோர்வை ஏற்படுத்தியது. ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டதால் திமுகவினர் சுறுசுறுப்படைந்தனர். எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். ஆட்சியைப் பிடித்து விடலாம் என திமுகவினர் உற்சாகமாக இருந்தனர்.

ஆனால், கடந்த மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன் டெபாசிட் தொகையையும் பறிகொடுத்தது.

இத்தகைய சூழலில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணபலம் நம்மை வீழ்த்தி விட்டது. இது தற்காலிகமான பின்னடைவே. கட்சியின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறு மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வழக்கமாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜெ.அன்பழகன், க.பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் போன்ற சிலரே துணிச்சலுடன் கருத்துகளை கூறுவார்கள்.ஆனால், இம்முறை ஸ்டாலினே கேட்டுக் கொண்டதால் 25-க்கும் அதிகமான மாவட்ட செயலாளர்கள் மனம்விட்டு பேசியுள்ளனர். கூட்டத்தில் பேசிய பலரும், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் நடந்த நிகழ்வுகள் திமுகவுக்கு சாதகமாக இருந்தன. ஆனால், முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு நிலைமை மாறியிருக்கிறது. அதன் விளைவுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு. இதனை புரிந்து அரசியலை நம் பக்கம் திருப்ப வேண்டும். மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுக்க வேண்டும்” என்றனர்.

மேலும் சிலர், “ஆட்சியில் இல்லாததால் சோர்வு உள்ளது. இதனைப் போக்க மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும்போது ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் ஸ்டாலின் உரையாட வேண்டும். எம்ஜிஆர் காலத்தில் 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோதும் நிர்வாகிகளை கருணாநிதி உற்சாகத்துடன் வைத்திருந்தார். அவரது பாணியை கையாள வேண்டும்” என கூட்டத்தில் பேசியதாக மாவட்டச் செயலாளர் ஒருவர் ‘தி இந்து’ விடம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x