

‘ரூ.6,000 நிவாரணத்தை ரொக்கமாக வழங்க தடை இல்லை’: ‘மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை’ என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘இடைக்கால உத்தரவு பிறப்பித்து, அதனை தாமதப்படுத்த முடியாது’ என கூறி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது. இதன்மூலம், ரூ.6,000 நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்க தடை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ‘நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. உண்மை பயனாளிகளுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்’ என்று அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அன்றைய தினம் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ரூ.6,000 நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள், ரேஷன் கடைகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 17-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இந்த நிவாரணத் தொகை விநியோகம் செய்யப்படுகிறது.
கேரளாவில் கரோனா - தமிழகத்தில் அலர்ட்: "கேரளாவில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பெரிய அளவில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மேலும், கேரளாவில் வியாழக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 230 ஆக உயர்ந்திருக்கிறது. ஆக்டிவ் கேஸஸ் என்ற வகையில் கேரளாவில் 1,104 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். ஆனால், இந்த தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மிதமான பாதிப்பு இருப்பதாகத்தான் கூறப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களில் பரவலாக மழையும், சனிக்கிழமை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடர்ன் தியேட்டர்ஸ் - கருணாநிதி சிலை சர்ச்சை: அரசு விளக்கம்: “மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத் துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை” என்று தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
முன்னதாக, சேலம் - மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை வைப்பதற்கு இடம் தேவைப்படுகிறது என்று கேட்டு, மாவட்ட அதிகாரிகள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர் என்று வர்மா கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக இயக்குநர் விஜயவர்மன் கூறியது குறிப்பிடத்தக்கது.
மக்களவை அத்துமீறல் | மூளையாக செயல்பட்ட லலித் ஜாவுக்கு போலீஸ் காவல்: மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவராக கருத்தப்படும் லலித் மோகன் ஜா வியாழக்கிழமை கடமைப் பாதை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே, கடமைப் பாதை காவல் நிலையத்தில் சரணடைவதற்கு முன்பு, லலித் ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லி சிறப்பு போலீசார் லலித்தை வெள்ளிக்கிழமை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து லலித் ஜாவை 7 நாட்கள் சிறப்பு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மதுரா மசூதி கள ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு: மதுராவின் கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரத்தில் வழங்கிய கள ஆய்வுக்கான உத்தரவுக்கு உடனடியாகத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. அதேநேரத்தில், இஸ்லாமியர்கள் தரப்பின் மனுக்களை நீதிபதிகள் அமர்வு ஜனவரி 9-ல் விசாரிக்கிறது.
முன்னதாக உத்தர பிரதேசத்தின் மதுரா மசூதியில் களஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு: ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மா வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா பங்கேற்றனர். பஜன்லால் சர்மா தனது 56-வது பிறந்தநாளில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மிக்ஜாம் புயல் நிவாரணம்: உதவிக்கரம் நீட்டும் திரையுலகம்: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். கடந்த டிசம்பர் 10-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 13-ம் தேதி ரூ.10 லட்சம் வழங்கினார். நடிகர் சூரி வியாழக்கிழமை ரூ.10 லட்சத்தை உதயநிதியிடம் வழங்கிய நிலையில், வெள்ளிக்கிழமை நடிகர் வடிவேலு ரூ.6 லட்சம் நிதி வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
பற்கள் உடைப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்மிருதி இரானி கருத்துக்கு கங்கனா ஆதரவு: மாதவிடாய் என்பது குறைபாடு அல்ல என்பதால், அதற்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அவசியமில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறிய கருத்துக்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்: நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் வெள்ளிக்கிழமை சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.