Published : 15 Dec 2023 03:12 PM
Last Updated : 15 Dec 2023 03:12 PM

மக்களவை அத்துமீறல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட லலித் ஜாவும், ‘ஆதார அழிப்பு’ பின்புலமும்

மக்களவை அத்துமீறல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட லலித் ஜா

புதுடெல்லி: மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவராக கருத்தப்படும் லலித் மோகன் ஜா வியாழக்கிழமை கடமைப் பாதை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே, கடமைப் பாதை காவல் நிலையத்தில் சரணடைவதற்கு முன்பு, லலித் ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை லலித் ஜாவை கைது செய்து விசாரணை நடத்திய டெல்லி சிறப்பு போலீசார், வெள்ளிக்கிழமை அவரை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதனைத் தொடர்ந்து லலித் ஜாவை 7 நாட்கள் சிறப்பு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸார் 15 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மக்களவை அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்த பின்னர் ராஜஸ்தானின் குச்சமன் நகரத்துக்குச் தப்பிச் சென்ற லலித் ஜா, அங்கு தனது நண்பர் மகேஷ் என்பவரைச் சந்தித்துள்ளார். அவர் லலித் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "மக்களவையில் அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்த பின்னர், லலித் ஜா டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு பேருந்து மூலம் சென்றுள்ளார். அங்கு குச்சமன் நகருக்குச் சென்ற அவர், அங்கு ஒரு விடுதியில் இரவு தங்கியுள்ளார். ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துள்ளார். பின்னர் டெல்லி வந்து போலீஸாரிடம் சரணடைந்துள்ளார்" என்று தெரிவித்தனர். மக்களவை அத்துமீறல் சம்பவத்தின் வீடியோக்களை அவரது நண்பருக்கு அனுப்பி வைத்துள்ளதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். என்றாலும், அவரிடமிருந்து எந்த போன்களையும் கைப்பற்றவில்லை. அவர் தனது நான்கு நண்பர்களின் போன்களையும் ராஜஸ்தானில் அழித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ராஜஸ்தானில் இருந்து கண்காணித்தேன்: காவல் துறையினரிடம் இந்த நிலையில் லலித் ஜா கூறுகையில், “சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எனது நண்பர்கள் மற்றும் எனது செல்போன்களை உடைத்து, அவற்றை ராஜஸ்தானில் தூர ஏறிந்து விட்டேன். நான் ராஜஸ்தானில் இருந்து அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்தேன். பல்வேறு போலீஸ் குழுக்கள் என்னைத் தேடுவதை அறிந்த நான், டெல்லிக்கு திரும்பி வந்து போலீஸில் சரணடைந்தேன்" என்று கூறினார்.

அவரிடம் வியாழக்கிழமை இரவு பல மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த அத்துமீறலுக்கு பல மாதங்களாக திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு அவர்களுக்கு அனுமதிச் சீட்டு தேவைப்பட்டுள்ளது. அதனை அவர்களால் எளிதில் ஏற்படு செய்ய முடியவில்லை. அவர்கள் தங்களின் நண்பர்கள் அனைவரிடமும் அனுமதிச் சீட்டு ஏற்பாடு செய்ய முடியுமா என்று விசாரித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகத் சிங் மீது ஈர்ப்பு: குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. விசாரணையின் போது அனைவரும் ஒரே மாதிரியான பதில்களையே கூறி வருகின்றன. இது அவர்கள் ஒருவேளை பிடிபட்டு விசாரணைக்கு உள்ளானால் எந்த மாதிரியான பதில்களைக் கூற வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தை எழுப்புவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த லலித் ஜா? - மக்களவை அத்துமீறல் சம்பவம் நடக்கும்போது லலித் ஜா நிகழ்விடத்தில் இல்லை. பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தாவில் ஆசிரியர் பணி செய்துவந்துள்ளார். மிகவும் அமைதியான மனிதராக கூறுப்படும் லலித் ஜா, தான் தங்கியிருந்த பகுதி மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனியாக கொல்கத்தாவின் புருலியா பகுதிக்கு வந்த அவர், யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் திடீரென அங்கிருந்து வேறு இடத்துக்குச் சென்றுள்ளார்.

மக்களவை அத்துமீறல்: முன்னதாக, மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புதன்கிழமை புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்துஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதேநேரத்தில், இந்த இருவருக்கும் ஆதரவாக நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே 2 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். வண்ண புகையை வெளியேற்றும் குப்பிகளையும் வைத்திருந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதுதொடர்பாக 4 பேரை டெல்லி சிறப்பு போலீஸார் கைது செய்தனர்.

மக்களவைக்குள் புகுந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் பெங்களூரு விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூருவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் (35) இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமிட்ட ஹரியாணாவை சேர்ந்த நீலம் (42) என்ற பெண், அமோல் ஷிண்டே (25). இவர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்களின் முழு பின்னணி > நாடாளுமன்ற அத்துமீறலுக்கு திட்டமிட்ட 6 பேர் யார்?

உபா சட்டம்: இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த யுஏபிஏ சட்டம் (UAPA - Unlawful Activities Prevention Act) கடந்த 1967-ல் கொண்டுவரப்பட்டது. நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் கைதான 6 பேர் மீதும் டெல்லி போலீஸார் இந்தக் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உபா சட்டத்தின் பிரிவு 16 (பயங்கரவாத செயல்), பிரிவு 18 (சதிச் செயல்) ஐபிசி பிரிவுகள் 120பி (கிரிமினல் சதி), 452 (அத்துமீறி நுழைதல்), 153 (கிளர்ச்சி செய்யும் நோக்கில் தூண்டுதலில் ஈடுபடுதல்), 186 (அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல்) மற்றும் 353 (மக்கள் பணி செய்பவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்ததல், அவர் மீது தாக்குதல் நடத்துதல்) எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: அத்துமீறல் சம்பவத்தையடுத்து, புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுன்றத்துக்கு வெளியேயுள்ள டிரான்ஸ்போர்ட் பவனில் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அடையாள அட்டைகளை சோதனை செய்த பின்பே நாடாளுமன்றத்துக்கு தொடர்புடையவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்துக்கு வந்த மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மாவின் கார் கூட நுழைய முடியவில்லை. அவர் காரில் இருந்து இறங்கி சர்துல் துவார் வழியாக நாடாளுமன்றத்துக்கு சென்றார். எம்.பி.க்களின் டிரைவர்களிடம் பாஸ் இல்லை என்றால், அவர்களும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் பத்திரிக்கையாளர்களிடமும் அடையாள அட்டை கேட்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பத்திரிக்கையாளர்கள் கூடும் இடம் பழைய நாடாளுமன்றத்தின் 12-ம் எண் நுழைவாயிலுக்கு அருகே உள்ள புல்வெளிக்கு மாற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x