Published : 20 Jan 2018 09:28 AM
Last Updated : 20 Jan 2018 09:28 AM

காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 75 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மாநகராட்சி ஆணையர் கைது: தரகராக செயல்பட்ட அதிமுக பிரமுகரும் சிக்கினார்

காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மு.வரதராஜ், இடைத்தரகரான அதிமுக பிரமுகர் பொன்.நாகராஜன் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் கீழ வஸ்தாசாவடியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் சம்பந்தம். ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலரான இவர், தஞ்சாவூர் மாநகராட்சி 6-வது வார்டில் உள்ள தனக்கு சொந்தமான 15,509 சதுர அடி காலி மனைக்கு, வரி நிர்ணயம் செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு செய்தார்.

ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், பல காரணங்களைக் கூறி அலைக்கழித்துள்ளனர். இடைத்தரகராக செயல்பட்ட தஞ்சாவூர் வடக்கு வீதியைச் சேர்ந்த மாநகராட்சி 7-வது வார்டு அதிமுக செயலாளராக உள்ள பொன்.நாகராஜன், சம்பந்தத்தை அணுகினார்.

அதன்படி சம்பந்தம், ஆணையர் வரதராஜை சந்தித்தபோது, ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். ரூ.75 ஆயிரம் தர ஒப்புக்கொண்ட சம்பந்தம், இதுகுறித்து தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின்பேரில், நேற்று மதியம் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த ஆணையர் வரதராஜிடம், பொன்.நாகராஜன் மூலமாக, சம்பந்தம் ரூ.75 ஆயிரத்தை லஞ்சமாகக் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராமதாஸ் தலைமையிலான போலீஸார், ஆணையர் வரதராஜ், இடைத்தரகர் பொன்.நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டதால், அந்தந்த நகராட்சி, மாநகராட்சி ஆணையர்களே சிறப்பு அலுவலர்களாகவும் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டது. இதனால், ஆணையர்களிடம் அதிகாரங்கள் குவிந்து கிடப்பதால், நிறைய முறைகேடுகள் நடப்பதாக மாநிலம் முழுவதும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இன்னும் 40 நாட்களில் ஓய்வு

பணி ஓய்வுபெற 40 நாட்களே உள்ள நிலையில், லஞ்சப் புகாரில் ஆணையர் மு.வரதராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெறுவதற்குள்ளாக, பெரும் தொகையை லஞ்சமாகப் பெறுவதற்காக, கடந்த சில மாதங்களாகவே, பணம் வரக் கூடிய அனைத்துக் கோப்புகளையும் கிடப்பில் போட்டு, மனுதாரர்களை இழுத்தடித்து, பின்னர் இடைத்தரகர் மூலமாக குறிப்பிட்ட தொகையை பெற்ற பின்னர், வேலையை முடித்துத் தந்ததாகக் கூறப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x