Published : 31 Jan 2018 09:03 AM
Last Updated : 31 Jan 2018 09:03 AM

தகடூர் கோபி எனப்படும் கோபாலகிருஷ்ணன் மறைவு: தமிழ் எழுத்துரு மாற்றி உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்

கணினிக்கான தமிழ் எழுத்துரு மாற்றி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த தருமபுரியைச் சேர்ந்த தகடூர் கோபி மாரடைப்பால் உயிரிழந்தார்.

கணினி தொழில் நுட்பத்தில் தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்துவதில் தொடக்க காலத்தில் பல்வேறு நடைமுறை சிரமங்கள் நிலவியது.

பல்வேறு எழுத்துரு வடிவங்களையும் ஒருங்கிணைத்து ஒரே வடிவிலான எழுத்துருவாக (யுனிகோடு) மாற்றிக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த கணினித் துறையைச் சேர்ந்த தமிழர்கள் பலரும் முயன்றனர். அவர்களில் தகடூர் கோபி என்று அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன்(42) என்பவரும் முக்கிய பங்காற்றி னார்.

இவர் தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தணிகாசலம் என்பவரின் மகன். கணினி துறையில் பொறியியல் பட்டம் முடித்த இவர் சென்னை, சிங்கப்பூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் கணினி மென்பொருள் துறையில் பணியாற்றிவர். ‘அதியமான் கோபி’, ‘தகடூர் கோபி’, ‘ஹாய்கோபி’ போன்ற பெயர்களில் தளங்களை உருவாக்கி இணையத்தில் செயல்பட்டு வந்தவர். ‘அதியமான் மாற்றி’, ‘தகடூர் தமிழ் மாற்றி’ ஆகிய எழுத்துரு மாற்றிகளையும் வெளியிட்டுள்ளார்.

இதுதவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் எழுத்துரு மாற்றிகளை உருவாக்கி அளித்துள்ளார். இறுதியாக ஹைதராபாத்தில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 28-ம் தேதி அதிகாலை மாரடைப்பு காரணமாக கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார். சொந்த ஊரான தருமபுரிக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடல் 29-ம் தேதி தருமபுரியில் அடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x